வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (16/05/2018)

கடைசி தொடர்பு:13:32 (16/05/2018)

காவிரி அமைப்புக்கே முழு அதிகாரம்..! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், `காவிரி வாரியத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை தாங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய தலைமையகம் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும்.

காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பான அதிகாரம் புதிதாக அமைக்கப்படும் அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருக்கக் கூடாது' என்று வாதங்களை முன்வைத்தார். கர்நாடக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், `காவிரி வாரியம் தொடர்பான வரைவுத் திட்டத்தின் பெரும்பான்மையான அம்சங்களை ஏற்றுக்கொள்கிறோம். காவிரி நீரை பயன்படுத்த அமைப்பிடம் அனுமதி பெறும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கர்நாடகாவில் தற்போது அரசு இல்லாததால் இந்த வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞர், `காவிரி அமைப்புக்கு வாரியம் என்று பெயர் வைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று தெரிவித்தார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், `காவிரி வாரியத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதியைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், வழக்கை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடக மாநிலத்தின் கோரிக்கையும் நிராகரித்தனர். காவிரி பாயும் பகுதியில் காவிரி அமைப்பின் அனுமதியில்லாமல் தமிழகமோ கர்நாடகமோ அணை கட்ட முடியாது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக வாரியமே இறுதி முடிவை எடுக்கும். மத்திய அரசை அணுக வேண்டியத் தேவையில்லை. நீர் பங்கீடு தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற வரைவு அறிக்கையின் அம்சத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவு. 3 அம்சங்களை புதிதாகச் சேர்த்து புதிய வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.