Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' மொத்தம் 46; வெளியானது 3 ஆடியோ'! - பி.ஜெவின் வில்லங்கப் பேச்சு வெளியான பின்னணி

ஜெய்னுல் ஆபீதீன்

' தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்-ன் உயர்நிலைக்குழு கூடி, தலைவர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஜெய்னுல் ஆபிதீனை விலக்கி வைக்கிறோம்' என்ற அறிவிப்பு இஸ்லாமிய சமூகத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. `பெண்ணுடன் தவறாகப் பேசியதை அவர் ஒப்புக் கொண்டார். மொத்தம் 46 ஆடியோக்களில் மூன்றுதான் வெளியாகியிருக்கிறது' என அதிர வைக்கின்றனர் தவ்ஹீத்துகள் வட்டாரத்தில். 

`இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்' என்ற தலைப்பில் பி.ஜெ ஆற்றிய உரைகள், இஸ்லாமிய இளைஞர்களிடையே அவருக்கான செல்வாக்கை வளர்த்தெடுத்தது. ஆனாலும், பொதுமேடைகளில் பி.ஜெவின் ஆபாசப் பேச்சுகள் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.' நான் சொல்வதுதான் சரி. என்னுடைய பேச்சுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்' என 12 ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமா அத்-ஐ  ஆண்டு வந்த பி.ஜெ, பெண் விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார். `அவரை ஏன் அமைப்பை விட்டு நீக்குகிறோம்?' என்பதை வீடியோ பதிவாக டி.என்.டி.ஜே பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அறிய பி.ஜெவைத் தொடர்பு கொண்டோம். அவரது எண்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. `அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. தலைமறைவாக இருக்கிறார். எங்களாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்கின்றனர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள். 

பி.ஜெ செய்த தவறு என்ன? 

``பெண் ஒருவரிடம் அவர் பாலியல்ரீதியாகப் பேசியதுதான் குற்றச்சாட்டு. உண்மையில் அது ஒரு வீடியோ ஃபைல். இருவரும் ஐ.எம்.ஓ ஆப்பில் பேசியுள்ளனர். அதன் ஆடியோ மட்டும்தான் வெளியாகியிருக்கிறது. வீடியோவை வெளியிடாமல் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. `மீண்டும் டி.என்.டிஜே வில் பி.ஜெ தலையை நீட்டினால், இந்த வீடியோ வெளியிடப்படும்' என ஒரு குரூப் உறுதியாகக் கூறிவிட்டது. இலங்கையைச் சேர்ந்த ஒரு டீம்தான் இந்த ஆடியோக்களை வெளியிட்டது. இத்தனைக்கும் அவருடைய செல்போனிலிருந்துதான் இந்தக் காட்சிகள் உருவப்பட்டுள்ளன" என விளக்கமாகப் பேசத் தொடங்கினார் தவ்ஹீத் ஜமா அத்- ன் மூத்த நிர்வாகி ஒருவர். 

ஜெய்னுல் ஆபிதீன் பி.ஜே``பி.ஜெவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. யார் பேசினாலும் அந்த போன் காலைப் பதிவு செய்வார். இலங்கை டீம் வசம் மொத்தம் 46 ஆடியோ, வீடியோ ஃபைல்கள் உள்ளன. அதில் மூன்றை மட்டும்தாம்  வெளியிட்டுள்ளனர். பி.ஜெவுடன் போனில் பேசும் அந்தப் பெண் வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஒருவரின் உறவினர். மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பம் அது. மதுரையிலிருந்து சென்னை வந்து செட்டில் ஆனவர்கள். ஆண்டர்சன் தெருவில் ஸ்டேஷனரி பொருள்களை பெரிய அளவில் சப்ளை செய்து வருகின்றனர். தங்கள் வருமானத்தில் கிடைத்த பணத்தில், சென்னையின் மையப் பகுதியில் டி.என்.டி.ஜேவுக்கு நல்ல இடம் ஒன்றையும் அளித்துள்ளனர். இந்தப் பெண்ணுக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். டி.என்.டி.ஜேவைப் பொறுத்தவரையில் யார் தலைவராக வந்தாலும், பி.ஜெ அசைவில்லாமல் எதுவும் நடக்காது. இத்தனை ஆண்டுகாலம் பி.ஜெ நினைப்பது மட்டும்தான் நடந்துகொண்டிருந்தது. அதற்கு ஒத்துவராததால்தான் எஸ்.எம்.பாக்கர் உள்ளிட்டவர்களைக் குற்றம் சொல்லி வெளியேற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கீர் முகமது அல்தாபி என்பவர் தவ்ஹீத் ஜமாத் தலைவராகப் பதவியேற்றார். சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளச் சேதத்தில் களத்தில் இறங்கி வேலை பார்த்ததில் அல்தாபியின் பெயர் பிரபலம் ஆனது. மிக இளவயது, மேடைப் பேச்சு என தவ்ஹீத்துகள் மத்தியில் அல்தாபியின் செல்வாக்கு உயர்ந்தது. 

இதை பி.ஜெ ரசிக்கவில்லை. தன்னை மீறி எந்த விஷயமும் நடப்பதை அவர் எந்தக் காலத்திலும் விரும்பியதில்லை. அல்தாபி மீது சில குற்றச்சாட்டுகளைப் பரப்பத் தொடங்கினார். தவ்ஹீத் ஜமா அத்-ஐ பொறுத்தவரையில், எதாவது விளக்கம் கேட்டு பெண்கள் வந்தால், இடையில் திரை ஒன்றைப் போட்டுவிட்டுத்தான் விளக்கம் கேட்பார்கள். அப்படி விளக்கம் கேட்க வந்த ஒரு பெண்ணை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டார் அல்தாபி. ஆனால், எந்தவித தவறான காரியங்களும் அங்கு நடக்கவில்லை. இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்து அல்தாபிக்கு நெருக்கடியைக் கொடுத்தார் பி.ஜெ. இதற்குப் பதிலளித்த அல்தாபி, `நான் செய்தது தவறு என்றால், நானே ராஜினாமா செய்கிறேன்' எனக் கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இப்போது பாங்காக்கில் செட்டில் ஆகிவிட்டார். இதன்பின்னரும், `விபசாரம் செய்துவிட்டார் அல்தாபி' என பி.ஜெ தரப்பில் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். இதை அல்தாபி எதிர்பார்க்கவில்லை. இதற்கு நிவாரணம் தேட விரும்பினார்.

இஸ்லாத்தில் நிவாரணம் தேடுவதை `முபகலா' என்பார்கள். இதுதான் கடைசி நிலை. தன்னை நிரூபிக்க குடும்பத்துடன் வந்திருந்தார் அல்தாபி. கடந்த மாதம் திருச்சியில் அமைக்கப்பட்டிருந்த பொதுமேடையில், `நான் தவறு செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் இறைவன், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் சாபத்தை உண்டாக்கட்டும்' எனக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார். அல்தாபிக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தை இலங்கை டீம் ரசிக்கவில்லை. இதன் விளைவாக மூன்றாவது ஆடியோவை ரிலீஸ் செய்தனர். முதல்முறை ஆடியோ வெளியானபோது, `இது மிமிக்ரி' எனக் கூறிவிட்டார்கள். அடுத்த சில நாள்களில் இரண்டாவது ஆடியோவை வெளியிட்டனர். இந்த ஆடியோவில் உள்ளவை, முதல் ஆடியோவை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பேசப்பட்ட செட்டில்மென்ட் தொடர்பானவை. மூன்றாவது ஆடியோ வெளியானபோது, `இது பி.ஜெதான்' என உறுதியான முடிவுக்கு வந்தனர் தவ்ஹீத் நிர்வாகிகள்" என்றவர். 

இதனையடுத்து, உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் கூட்டம் கூடியது. அந்தப் பெண்ணின் உறவினர்களை அழைத்து விசாரித்தனர். அவர்கள் தெளிவாக ஒரு விஷயத்தை முன்வைத்தனர். `பி.ஜெ குரலை யாரோ மிமிக்ரி செய்துவிட்டார்கள் என நீங்கள் சொல்லலாம். ஆனால், அந்த ஆடியோவில் கேட்கும் குரல் எங்கள் பெண்ணின் குரல்தான். பி.ஜெ இதை மறுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். காரணம், பி.ஜெ போல பேசிய அந்த நபருக்குத் தண்டனை வாங்கித் தருவோம். மாறாக, இந்த விஷயத்தை பி.ஜெ ஒத்துக் கொண்டால், ஜமாத் எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுப்படுவோம்' எனக் கூறிவிட்டனர். இதனை எதிர்பார்க்காத பி.ஜெ, அந்தக் குடும்பத்தை சமசரப்படுத்த எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார். ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்வதற்கும் அந்தக் குடும்பம் தயாராகிவிட்டது. இதன்பிறகுதான் வேறு வழியில்லாமல் பி.ஜெ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிவிட்டது. பெண்ணின் குடும்பம் உறுதியாக இருந்ததால்தான் இப்படியொரு நடவடிக்கையை எடுக்க முடிந்தது. இதிலும் அந்தப் பெண் வீட்டார் திருப்தியடையவில்லை. எனவேதான், பி.ஜெ ஒத்துக்கொண்டதாக வீடியோ பதிவையும் வெளியிட்டனர்" என்றார் விரிவாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement