`எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க 100 கோடி ரூபாய் பேரம் பேசியது..!’ - குமாரசாமி குற்றச்சாட்டு | BJP tells to give 100 crores to our MLAs says Kumaraswamy

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:16:01 (16/05/2018)

`எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க 100 கோடி ரூபாய் பேரம் பேசியது..!’ - குமாரசாமி குற்றச்சாட்டு

ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதற்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு 100 கோடி ரூபாய் அளிப்பதாகப் பா.ஜ.க பேரம் பேசியது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

குமாரசாமி

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டமன்றம் நிலவுகிறது. மற்ற கட்சிகளைவிட அதிகமாக 104 தொகுதிகளை வென்ற பா.ஜ.க ஆட்சியமைக்க உரிமை கோருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிவருகிறது. இந்தநிலையில், குமாரசாமி தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் குமாரசாமி சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கோவா, மணிப்பூர் வழியில் போதிய ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது பா.ஜ.க. கோவா, மணிப்பூரில் தனிப் பெரும்பான்மை பெறாமலேயே ஆட்சி அமைத்தது பா.ஜ.க. மத்திய அரசு அவர்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவருகிறது. பா.ஜ.க, எங்கள் கட்சியை உடைக்கப் பார்க்கிறது. எங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு 100 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி தருகிறோம் என்று ஆசை காட்டுகிறது.

குதிரைப் பேரத்தில் பா.ஜ.க ஈடுபட்டுவரும் வேளையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸுடன்தான் கூட்டணி. நாட்டுக்காகப் பிரதமர் பதவியை உதறிவிட்டு வந்தது என் குடும்பம். குதிரை பேரம் நடைபெறும் குடியரசுத் தலைவர், ஆளுநர் தடுக்க வேண்டும். எங்களிடமிருந்து ஒரு எம்.எல்.ஏ-க்களை தூக்கினால், அவர்களிடமிருந்து இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவோம்' என்று தெரிவித்தார்.