12-ம் வகுப்பு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி - மாணவி தீக்குளிப்பு

தூத்துக்குடியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தினைச் சேர்ந்த பனைத் தொழிலாளியான பொன்பலவேசம் என்பவரது மகள் முத்துச்செல்வி. இவர் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வந்தார். இன்று காலை வெளியான 12 ம் வகுப்பு தேர்வு முடிவில் கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் ஆகிய 2  பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. 

இதனால் மனவேதனையடைந்த முத்துச்செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். முத்துச்செல்வியின் அலறல் சப்தம் கேட்ட பக்கத்து வீட்டினர், அவரை உடனடியாக சிகிச்சைக்காக விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

மாணவி தற்கொலை

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முத்துச்செல்வி கொண்டு வரப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி முத்துச்செல்வியின் அண்ணன் முத்துராஜிடம் பேசினோம்., ``இன்னைக்கு காலையில கூட படித்த மாணவிகளுடன் ரிசல்ட் பார்க்க, பள்ளிக்குப் போயிருந்தா.., ரிசல்ட்டில் 2 பாடம் ஃபெயிலானது தெரிஞ்சதும் அழுதாளாம். மற்ற மாணவிகள் என் தங்கை பெயிலானதை வெச்சு, கிண்டல் செஞ்சிருக்காங்க.  ஃபெயிலான என்ன.., அடுத்த தடவை எழுதிக்கிடலாம்னு வீட்டுல எல்லாரும் சமாதானப் படுத்தி வெச்சோம். ஆனாலும், அழுதுகிட்டுதான் இருந்தா. தோட்டவேலைக்கு எல்லாரும் போயிருந்ததுனால, வீட்டில தனியா இருந்தவள்.., மண்ணெண்ணைய ஊத்தி தீ வச்சுக்கிட்டா.." எனக் கூறியபடியே விம்மி அழுதார். 

``85% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது முத்துச்செல்வியின் நிலை குறித்து எதுவும் செல்ல முடியாது. 2 மணி நேரம் கழித்தே முத்துச்செல்வியின் உடல் நிலை குறித்து தெரிவிக்க முடியும்." என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!