ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வி - விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி தற்கொலை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அரசுத் தேர்வுகள் துறையின் இணையதளத்தில் வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 39,539 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 15,129 மாணவர்களும், 17,826 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 78.02, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.48. மொத்த தேர்ச்சி விகிதம் 83.35. இது கடந்த 2017 தேர்ச்சி விகிதத்தைவிட 3.1% குறைவு.

தற்கொலை

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூர் கிராமம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி அதேபகுதியில் உள்ள குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து பொதுத்தேர்வையும் எழுதியிருந்தார். இன்று காலை வெளியான தேர்வு முடிவுகளில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதனால் மனமுடைந்த அவர் அதே ஊரில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து கச்சிராப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

அதேபோல தேர்வில் தோல்வியடைந்த கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலைக் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மாணவி தூக்கு மாட்டிக் கொண்டும், திருக்கணங்கூரைச் சேர்ந்த அறிவழகன் என்ற மாணவர் அரளி விதையை அரைத்துத் தின்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் வரும் ஜூன் மாதம் 25-ம் தேதியே தேர்வெழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் மாணவர்களின் இந்த முடிவு தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!