வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (16/05/2018)

`உங்க மனசுதான் என் வயசு!’ - குமரி மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நெகிழ்ந்த கமல்

கன்னியாகுமரியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கமல் தெரிவித்தார். மேலும், விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு கமல் உதவி செய்தார்.

ன்னியாகுமரியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கமல் தெரிவித்தார். மேலும், விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு கமல் உதவி செய்தார்.

கன்னியாகுமரியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னியாகுமரி மவட்டத்தில் மக்களைச் சந்தித்து வருகிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், தென் தாமரைக்குளம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பேசினார். மணக்குடி மீனவர் கிராமத்தில் பேசுகையில், "ப்ளஸ்டூ மாணவர்களை வாழ்த்துவது தமிழனாகிய எனது கடமையாகும். மாணவர்களின் நாளைய நோக்கிய பயணத்துக்கு வாழ்த்துகள். கல்வி, சுகாதாரம், நேர்மை ஆகியவை தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும். இந்த நற்குணங்கள் உடையவர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். நேர்மையாக வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள் நீங்கள். உங்களைப் பார்த்து ஓட்டு போடுங்கள் எனக் கூறுவது பிற்பாடு. உங்களுக்கு எது பெரிய தாக்கமாக, தேக்கமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள வந்திருக்கிறேன். பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி உங்களை ஈர்ப்பது நான் முன்பு செய்த வேலை. இப்போது நான் மக்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். நம்முடைய சந்திப்பு அடிக்கடி நடக்கும். இந்தக் கூட்டம் பெருக வேண்டும்" என்றார். முன்னதாக மணக்குடிக்கு வந்த உடன் பேச முற்பட்ட கமல்ஹாசனிடம் அங்கிருந்த ரசிகர் ஒருவர் தலைவருக்கு வயசு என்ன' என சத்தமாகக் கேள்வி எழுப்பினார். அந்த ரசிகரைப் பார்த்து "உங்க மனசுதான் என் வயசு?’" என்றார்.

கன்னியாகுமரியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கமல்

அடுத்ததாகக் குளச்சலில் மீனவர்கள் மத்தியில் கமல் கலந்துரையாடினார். அப்போது சில சிறுமிகள், "ஒகி புயலின்போது மீனவர்களைக் காப்பாற்ற அரசு முன்வரவில்லை. பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்கும் விதமாக மீட்புப்படகு வாங்க நிதி சேர்த்து வருகிறோம். மீட்புப்படகு வாங்க நீங்களும் நிதி தர வேண்டும்" என்றனர். மேலும், சிறுமிகள் கமல் முன் உண்டியல் குலுக்கினர். அதற்கு கமல், "நான் இப்போது பணம் கொண்டுவரவில்லை. படகு வாங்குவதற்காக நான் 5 லட்சம் ரூபாய் தருகிறேன்" என்றார். குளச்சலிலிருந்து கருங்கல் செல்லும் வழியில் ஒரு பைக் விபத்துக்குள்ளானது. அதில் காயமடைந்த பெண்ணைத் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வழியில் ஆம்புலன்ஸ் வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.