மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் உயிரிழப்பு! - பெயின்டிங் வேலையின் போது விபரீதம்

திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தில் பெயின்ட் வேலை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த 2 தொழிலாளிகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திருப்பூர் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் வசித்து வரும் பழனிசாமி என்பவர், அப்பகுதியில் புதிதாக வாடகைக்கு விடுவதற்காக வணிக வளாகம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். அடுத்த வாரம் திறப்பு விழா நடைபெறவிருந்த சூழலில், தற்போது கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. அந்தப் பணிகளை அப்பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ராஜாமணி என்பவர் கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கட்டடத்தின் சுற்றுப்புறத்தை அளவீடு செய்வதற்காக ராஜாமணியும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் வந்திருந்தனர். கட்டடத்தின் மொட்டை மாடிப் பகுதியில் நின்றவாறு இருவரும் அளவீடு பணிகளைச் செய்துகொண்டிருக்க, அப்போது அவர்களது கையில் வைத்திருந்த இன்ச் டேப் அங்கிருந்த மின்சாரக் கம்பியில் பட்டு இருவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. அதிக அளவு மின்சாரம் உடலில் பாய்ந்ததால், தொழிலாளிகள் இருவரும் அடுத்த சில நொடிகளிலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தொழிலாளிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர்.
தொழிலாளிகளின் மரணம் அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!