வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:18:03 (16/05/2018)

சிலை மோசடி! - இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு

பழனி முருகன் சிலை மோசடி விவகாரத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் அறிவித்துள்ளனர். 

சிலை மோசடி

2004-ம் ஆண்டு நவபாஷாண சிலையை மறைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட 200 கிலோ பஞ்சலோக சிலையில் பெரும் மோசடி நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டது. இந்தச் சிலை மோசடி தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி விஷயமாக தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ஏ.கே. ராஜா ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இதே மோசடிக்காக திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற இணை ஆணையர் புகழேந்தி மற்றும் அப்போது பணியாற்றிய நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் இருவரையும் சமீபத்தில் காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து பழநியில் சிலை மோசடி விவகாரம் விசாரிக்கப்படுகிறது. மோசடி விவகாரம் நடைபெற்றபோது இந்து சமய அறநிலைத்துறை ஆணையராகப் பணியாற்றிய தனபாலுவை விசாரிக்க 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக அறிவித்து சிலை தடுப்பு போலீஸார் மும்முரமாகத் தேடிவருகிறார்கள். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.