வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:19:52 (18/05/2018)

`சாலை போக்குவரத்தில் தன்னிகரற்ற வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறோம்!’ பொன்.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தில் இந்தியா தன்னிகரற்ற வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

                             

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளைத் தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி முன்னிலை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சங்கரசுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். 

அப்போது அவர் பேசியதாவது, ”உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்துக்காக
53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. இது மொத்த நீளத்தில் 2 சதவிகிதம் மட்டுமே ஆகும். ஆனால், இந்தச் சாலைமூலம் சுமார் 80 சதவிகிதம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன. 

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றவுடன், உலகத் தரத்தில் இந்தியாவில் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தையும் தரத்தையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கவும் உத்தரவிட்டார். 

                                     

முந்தைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்கு கி.மீ நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 28 கி.மீ தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு நாள் ஒன்றுக்கு 40 கி.மீ அளவை எட்டுவதற்காகப் பாடுபட்டு வருகிறோம். இந்தியாவிலேயே அதிகம் விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டுகிறது. 
பெரம்பலூரில் உயிரிழப்புகளைத் தவிர்க்க இங்கு தரைவழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் 2019 பிப்ரவரியில் நிறைவடையும். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளித்து தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். ஒவ்வொரு எம்.பி-க்கும் குறைந்தபட்சம் ஒரு திட்டம் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க பெரம்பலூர் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்துக்கும் மத்திய மந்திரியிடமும் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்கு வரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.