`காவிரி விவகாரத்தில் தி.மு.க. தில்லுமுல்லு அரசியல் செய்கிறது!’ - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் | Minister Sellur raju slams DMK over Cauvery Issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (16/05/2018)

`காவிரி விவகாரத்தில் தி.மு.க. தில்லுமுல்லு அரசியல் செய்கிறது!’ - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

காவிரி விவகாரத்தில் தி.மு.க., தில்லுமுல்லு அரசியல் செய்வதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

காவிரி பிரச்னையில் தி.மு.க. தில்லுமுல்லு அரசியல் செய்வதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

செல்லூர் ராஜூ

நீலகிரி மாவட்டம் குன்னூர், கூட்டுறவு அங்காடிகளை ஆய்வு செய்ய வந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், `காவிரி விவகாரத்தில் தி.மு.க., தில்லு முல்லு அரசியல் செய்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர்களைப் பல்வேறு வழக்குகளிலிருந்து காப்பாற்ற 1974 ம் ஆண்டு காவிரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாததே, காவிரி பிரச்னை இன்று வரை தொடரக் காரணமாக உள்ளது. தி.மு.க., மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது காவிரி பிரச்னைக்குத் தீர்வுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழகத்திற்கான தண்ணீர் பெற தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஊட்டியில் வெகு நாள்களாகவே இருந்து வரும் பார்க்கிங் பிரச்னைக்குக் கூட்டுறவு துறை மூலம் நிரந்தத் தீர்வு எடுக்கப்படும். மேலும் மலை மாவட்டமான நீலகிரியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்குக் காய்கறிகளைக் கொண்டு வரும் விவசாயிகள். தங்குவதற்கு போதுமான இட வசதி இல்லையென நீண்ட நாள்களாகவே விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர், மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளை கொண்ட தங்கும் விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு அங்காடி மற்றும் சங்கங்களில் முறைகேடு, உரம் பற்றாக்குறை, விதைகள் பற்றாக்குறை கண்டுபிடிக்கப்பட்டால் துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க