வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (16/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (16/05/2018)

விவசாயிகளை பி.ஜே.பியால்தான் காப்பாற்ற முடியும்! சொல்கிறார் தமிழிசை

விவசாயிகளை யாராலும் காப்பாற்ற முடியாது பிஜேபியால்தான் காப்பாற்ற முடியும் எனத் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

`தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட கட்சி பி.ஜே.பிதான். அது காவிக் கட்சி மட்டுமல்ல விவசாயிகள் பசியைப் போக்கும் பச்சைக்கும் சொந்தமானதுதான். விவசாயிகளை யாராலும் காப்பாற்ற முடியாது. யார் பின்னாலும் போகாதீர்கள். மத்தியில் ஆளும் பி.ஜே.பியால்தான் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்’’ எனக் கல்லணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

பிஜேபி சைக்கிள் பேரணி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களில் பி.ஜே.பி சார்பில் ``உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி" நேற்று தொடங்கியது. இன்று கரி நாள் என்பதால் நேற்றே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். ஆனால், பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த சைக்கிள் பேரணியை இன்றும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்லணையில் தொடங்கும் இந்தப் பேரணி நாகை, திருவாரூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 2ம் தேதி பேராவூரணியில் நிறைவடைகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். நதிகளை இணைத்து உழவனின் உயிர் காத்திட வேண்டும். ஆறுகளில், மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும். ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முக்கியமாக வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

இதில் பேசிய தமிழிசை, ``தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட கட்சி பி.ஜே.பிதான். அது காவிக் கட்சி மட்டுமல்ல, விவசாயிகள் பசியைப் போக்கும் பச்சைக்கும் சொந்தமானதுதான். விவசாயத்திற்கு தமிழனின் தோழனாகவும், சுயநலவாதிகளின் கட்சிக்கு முடிவு கட்டும் கட்சியாகவும் இன்று உள்ளது. தமிழக மக்களுக்குக் காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மறுக்கப்பட்ட காவிரி தெளிவான திட்டத்தில் பாய்ந்தோடப் போகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் நிதானமாக காவிரி விஷயத்தைச் செயல்படுத்துகிறோம்.

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு 25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது அது 10 லட்சம் ஹெக்டேராகச் சுருங்கி விட்டது. விவசாயிகளை யாரும் காப்பாற்ற முடியாது. யார் பின்னாலும் போகாதீர்கள். மத்தியில் ஆளும் பி.ஜே.பியால்தான் காப்பாற்ற முடியம். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெற்ற வெற்றி, தமிழகத்திலும் தொடரும். இதன்முலம், பி.ஜே.பிக்கு தென் இந்தியாவின் வெற்றி வாசல் திறக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் காவிக்கொடி பறக்கும். அதுபோல தமிழகத்திலும் காவிக்கொடி பறக்கும். அதற்கு பச்சைத்துண்டு கொண்ட விவசாயிகள் உறுதுணையாக இருப்பார்கள்’’ என்றார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``காவிரி பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடும். காவரியில் நமக்கு உள்ள உரிமையை உழவனின் உரிமை மீட்புப் பேரணி தெளிவுபடுத்தும். காவிரி விவகாரத்தில் பொய்யான பிரசாரம் செய்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு, இதில் முட்டுக்கட்டை போடுவோம். இது பி.ஜே.பியின் யாத்திரை எனக் கருதாமல் நம் மண்ணின், நம் குடும்பங்கள் முன்னேற நடக்கும் பேரணியாகக் கருத வேண்டும். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி உள்ளதால் காவிரி பிரச்னைக்குத் தீர்வு நெருங்கி வந்து விட்டது என்று நினைத்தேன். அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க