அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது! | Sri Lankan navy arrested SL refugee family with 11-month-old child

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:16:13 (09/07/2018)

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரக்கணக்கானோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் பலர் தங்கள் தாயகத்துக்குத் திரும்பி வருகின்றனர். இவர்களில் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த அனுமதி இன்றியும் இலங்கைக்குச் செல்கின்றனர்.

கடந்த 2006- ம் ஆண்டு இலங்கை திரிகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழக முகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் பகுதியில் பயணித்துள்ளனர். இவர்களை கண்ட இலங்கை கடற்படையினர் படகினை வழிமறித்து விசாரணை நடத்திய போது இவர்கள் ஆவணங்களின்றி கள்ளத்தனமாக தாயகம் திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அகதிகள் 4 பேர் மற்றும் இலங்கை படகோட்டிகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.