கோயில் நிலங்களை மீட்டுக் கொடுங்கள்! சிவன் வேடத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட நபர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பினர் சிவபெருமான் வேடமணிந்து, விநாயகர் சிலையுடன், சமபந்தி நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கோயில் நிலங்களை மீட்கக் கோரி மனு

கோவில்பட்டி அருகில் உள்ள நாலாட்டின்புதூரில் திருவண்ணாமலை கார்த்திகை தீப மடாலயத்துக்குப் பாத்தியப்பட்ட நிலங்களைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதேபோல, தோணுகாலில் உள்ள சுந்தர விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என 5-வது தூண் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும், அவர்களுக்குத் துணை நின்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மந்தித்தோப்பு, லிங்கம்பட்டி பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா என்ற பெயரில் போலி பட்டாக்கள் அதிக அளவில் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் 5வது தூண் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமபந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இன்று வருகை தந்தார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், சிவபெருமான் வேடமணிந்து, விநாயகர் சிலையுடன் ஆட்சியர் வெங்கடேஷை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!