கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு! - ஆளுநர் அதிகாரபூர்வ அழைப்பு

கர்நாடக முதல்வராகப் பா.ஜ.க-வின் எடியூரப்பா பதவியேற்க ஆளுநர் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 

எடியூரப்பா

கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சியமைக்க ஆதரவு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே, 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பா.ஜ.க-வும் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தான், பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்பு ஆளுநர் இந்த முடிவை அறிவித்துள்ளார். மேலும் பதவியேற்றபின் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து நாளை காலை 9.30 மணியளவில் எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என பா.ஜ.க பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நிரூபித்த பின்பு அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிகிறது. யாரும் எதிர்பாராத வகையில் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!