வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (16/05/2018)

கடைசி தொடர்பு:10:58 (17/05/2018)

கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை - வேல்முருகன்!

'கமல்ஹாசனின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை' எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

வேல்முருகன்

நெய்வேலியில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  ``மத்திய அரசும் கர்நாடக அரசும், காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துவருகிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு திட்டமிட்டு காலம் தாழ்த்தியது. இது, ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியச் செயல் அலுவலகம் பெங்களூரில் அமைய உள்ளது. இது ஏற்புடையது அல்ல. இந்த அலுவலகம் கர்நாடகாவில் அமைந்ததால் பாதுகாப்பானது இல்லை. காவிரிக்குத் தொடர்பான 4 மாநிலங்கள் தவிர, வேறு இடத்திலோ அல்லது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை, காவிரி மேலாண்மை வாரிய இறுதித் தீர்ப்பு வர உள்ளது. இதில், தமிழக அரசு தனது வழக்கறிஞர்கள்மூலம் முழு அழுத்தம் கொடுத்து, எதிர்காலத்தில் காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் இல்லாமல் இருக்க வாதிட வேண்டும். அப்படி கர்நாடகா அரசு தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால், அணையை ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக மத்திய அரசும், கர்நாடகா அரசும் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துவருகின்றன. உச்ச நீதிமன்றம் கூறிய 4 டிஎம்சி தண்ணீரையே இன்னும் கர்நாடகா அரசு வழங்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு மத்திய அரசுடன் சமரசம் செய்துகொள்ளாமல், அதன் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் செயல்பட வேண்டும். தமிழக அரசு, இந்தப் பிரச்னையில் மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தினாலும், அறப் போராட்டம் நடத்தினாலும் எங்களுக்குத் தமிழக அரசுமீது கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரிக்கும்.  தமிழக அரசு உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தனது தலைமையில் 12-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு என்னையும் கலந்துகொள்ளச் சொல்லி போனில் அழைப்புவிடுத்தார். காவிரிப் பிரச்னையில் கமலின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். நாங்கள் 7 ஆண்டுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தபோது தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். நடிகர்கள் அரசியலுக்கு வருவது எங்கள் கட்சி கொள்கைக்கு முரணானது. அதனால், நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" என்று கூறினார்.