`சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட கேஎல் ராகுல்' - கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில், கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. 

மும்பை அணி

photo credit: @ipl 

இந்த ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க, இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தப் போட்டி அமைந்தது. அந்த வகையில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் குர்னல் பாண்டியா, பொலார்ட் தவிர மற்றவர்கள் சோபிக்கத் தவறினர். குர்னல் பாண்டியா 27 ரன்களும், பொல்லார்ட்  50 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக, ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்துக் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, வழக்கம்போல கெய்ல் - ராகுல் இணை தொடக்கம் தந்தது. இதில், கெய்ல் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த பின்ச் - ராகுல் இணை ஆட்டத்தைக் கையில் எடுத்தது. இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 16.1-வது ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தபோது, பின்ச் அவுட் ஆனார். எனினும், தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கேஎல் ராகுல், 6 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 18-வது ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்தபோது, கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ராகுல் அவுட் ஆனார். இதனால், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் சொதப்ப, 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.  இந்த வெற்றியின்மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!