வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:09:13 (17/05/2018)

அடுத்தடுத்து முற்றுகை... அல்லல்படும் திருச்சி அரசு மருத்துவமனை!

அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், பச்சிளங்குழந்தை உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி,  திருச்சி அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் பைசல். இவர், திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கும் ராபியத்துல் பஷிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமண வாழ்வில் ராபியத்துல் பஷிரியா கர்ப்பமடைந்தார். இது அவருக்கு தலைப்பிரசவம் என்பதால், அவரது குடும்பத்தினர் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில், ராபியத்துல் பஷிரியாவுக்கு கடந்த திங்கள்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதும், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகக் கூறினர். இந்நிலையில், இன்று அதிகாலை பஷிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூற, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதற்குச் சம்மதித்தனர். அதையடுத்து, அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை மருத்துவர்கள் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பஷிரியாவின் உறவினர்கள், மருத்துவர்கள் அலட்சியமான சிகிச்சையாலேயே, பிரசவத்தில் குழந்தை இறந்தது என்று கூறி, திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல சில தினங்களுக்கு முன், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாற்றுத்திறனாளி மற்றும் அவரது மகள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துப் பயண அட்டை பெறுவதற்கான பரிசோதனை செய்யச் சென்றபோது அங்கு பணியிலிருந்த மருத்துவர், இலவச பஸ் பாஸ்களால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது எனக் கூறி கையெழுத்துப் போட மறுத்ததாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெயபால் தலைமையில் 25 மாற்றுத்திறனாளிகள், திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா, சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்த முற்றுகைப் போராட்டங்களால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க