வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (17/05/2018)

கடைசி தொடர்பு:08:46 (17/05/2018)

நெல்லையில் இடி தாக்கியதில் 30 ஆடுகள் பலியான சோகம்..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளம் கிராமத்தில் இடி தாக்கியதில் 30 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளம் கிராமத்தில், இடி தாக்கியதில் 30 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

ஆடுகள் பலி

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்துவரும் கன மழை காரணமாக, நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது. அத்துடன், கத்தரி வெயிலின் கொடுமையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இடியுடன்கூடிய கனமழையால்,  பரமேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டார்குளம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சங்கரபாண்டியன் பாதிப்புக்கு உள்ளானார். தனக்குச் சொந்தமான 40 ஆடுகளை அப்பகுதியில் மேய்த்துகொண்டிருந்தபோது, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. 

அப்போது, அருகில் இருந்த மரத்தின் அடியில் ஆடுகளுடன் அவர் ஒதுங்கியிருக்கிறார். அங்கு மின்னலுடன் இடி தாக்கியதில், 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ஆடுகளின் அருகே இருந்த சங்கரபாண்டியன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். தான் வளர்த்துவந்த ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்ததால் வேதனையடைந்த சங்கரபாண்டியன், இந்த இழப்புக்கு, அரசு சார்பாக உதவி வழங்க வேண்டும் எனக் கூறினார்.