`எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது' - காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! #KarnatakaCMRace

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடை விதிக்க முடியாது எனக் கூறி காங்கிரஸ் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

எடியூரப்பா

கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் விடுத்ததுடன் 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆளுநரின் அழைப்பை அடுத்து காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, ``ஆளுநர் எடியூரப்பாவை அழைத்ததன் மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநர் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார். தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் 15 நாள்கள் அவகாசம் எதற்கு?. ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார். இதற்கிடையே, ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்கச் சொன்னதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவை இரவிலேயே விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி காங்கிரஸ் மனுவை இரவு விசாரணை செய்ய ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாட்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்தியது. காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகினார். பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி, கே.கே.வேணுகோபால் ஆஜராகினர். முதலில் காங்கிரஸ் தரப்பிலான வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். அப்போது,  ``104 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சட்ட விரோதமானது. ஆளுநரின் முடிவு என்பது அவசர கதியில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்சிதான் ஆட்சி அமைத்தது. இதே நிலைதான் கோவா உட்பட 7 மாநிலங்களில் நடந்தது. ஆளுநரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆளுநரின் முடிவை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 15 நாள் அவகாசம் என்பது அதிகம். அதனைக் குறைக்க வேண்டும். நீதிமன்றம் ஆளுநரின் முடிவில் தலையிட வேண்டாம். குறைந்தபட்சம் எடியூரப்பா பதவியேற்பு விழாவையாவது ஒத்திவைக்க வேண்டும்" என அபிஷேக் சிங்வி வாதிட்டார். 

இதன்பின் வாதிட்ட முகுல் ரோஹத்கி ``ஆளுநரின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் 7 நாள்களுக்குள் எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். ஜனாதிபதியும், ஆளுநரும் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவரது பணியைச் செய்யவிடுங்கள். நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்தால், எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. காங்கிரஸின் மனுவை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த மனுவில் நள்ளிரவில் விசாரிக்கத் தேவையான சாராம்சம் எதுவும் இல்லை. எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றால் வானம் இடிந்து விழுந்து விடுமா?. அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த  நள்ளிரவில் இதுபோன்ற விசாரணை தேவையற்றது" என்றார்.

சுமார் மூன்றரை மணி நேரம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 5.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினர். அதில்,  ``எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது. காலை அவர் பதவியேற்கலாம். அதேவேளையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படாது. தொடர்ந்து இவ்வழக்கு நடைபெறும். அனைத்துத் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரிவாக விசாரணை செய்யப்படும். நாளை காலை 10.30 மணிக்கு அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அப்போது எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ அதிகாரம் கிடையாது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து பதவியேற்பு செல்லும்" என்று உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் உத்தரவைத் தொடர்ந்து எடியூரப்பா பதவியேற்புக்கு இருந்த சிக்கல் தற்போது தீர்ந்துள்ளது. ஆனாலும் பதவியேற்புக்குப் பின்னர் விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!