வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:08:31 (17/05/2018)

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மக்களுக்காகத் திட்டமிடும் 17 பேர் குழு - தகவல் அனுப்பும் கமல்ஹாசன்!

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் 17 பேர் அடங்கிய குழு மக்களுக்கு என்ன செய்யலாம் என தீவிரமாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் நாகர்கோவிலில் பேசினார்.

'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 17 பேர் அடங்கிய குழு, மக்களுக்கு என்ன செய்யலாம் எனத் தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது' என்று கமல்ஹாசன் நாகர்கோவிலில் பேசினார்.

கமல்ஹாசன்

கன்னியாகுமரியில் மக்களைச் சந்திக்க நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன், நிறைவாக நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவர், "அடிக்கடி நாகர்கோவிலுக்கு நான் வந்ததில்லை. சிறுவயதில் டி.கே.சண்முகம் அண்ணாச்சியுடன் ஒரு மாதம் நாகர்கோவிலில் தங்கியிருக்கிறேன். நான் கற்ற கல்வி, கலைதான். இந்தக் கூட்டத்தின் மத்தியில் நீங்கள் பேசுவீர்களா என 10, 15 வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால், ஆம் சினிமா நடிகனாகப் பேசுவேன் எனச் சொல்வேன். ஆனால், நான் இப்போது சினிமாக்காரனாக அல்ல, அரசியல்வாதியாக வந்திருக்கிறேன். உங்கள் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். தமிழகம் புது யுகத்தை நோக்கி நகருகிறது. நகர்த்தும் கரங்கள் உங்களுடையது. உங்கள் கரங்களின் உதவியால் நாளை நமதாக அமையும். இந்த வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொண்டு வந்தேன். மக்கள் நீதி மய்யம் என்ன செய்துவிடும் என இப்போது சொல்ல முடியாது. யாருக்காகச் செய்யும் என்றால், உங்களை சுட்டிக்காட்ட முடியும். உங்களுக்கு செவி சாய்ப்பதற்காக நான் வந்துள்ளேன்.

கமல்ஹாசன்

இப்பொழுதே உங்களுக்கு எல்லாம் செய்துவிடுவேன் என்று சொல்லிவிட முடியாது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 17 பேர் அடங்கிய குழு, மக்களுக்கு என்ன செய்யலாம் எனத் தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. நான், அவர்களுக்கு இங்கு நடக்கும் தகவல்களையும் செய்திகளையும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். தம்பி மௌனத்தைக் கலைக்கச் சொல்கிறார். மௌனம் கலைந்துவிட்டது, நீங்கள் மௌனமாக இருந்ததால்தான், நானும் மௌனமாக இருந்தேன். எல்லோரும் பேசும் மேடையாக இது அமையும். உங்கள் அன்பு, ஆதங்கம் எனக்குப் புரிகிறது. கிராம சபையில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினராக இருப்பவர்கள், மையம் விசில் என்ற செயலியை உங்கள் போன்களில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு பேச நினைப்பதை விவரமாக நீங்கள் விசில் செயலியில் சொல்லலாம். இந்த மேடையிலேயே எல்லாவற்றையும் பேசி முடிப்பது நடக்கும் காரியம் அல்ல. உங்கள் குறைகளைக் கேட்பது என் கடமை" என்றார்.