`எடியூரப்பா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட்' - ப.சிதம்பரம் பாராட்டு!

'எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரணைசெய்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட்' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ப சிதம்பரம்

கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில், 104 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார். காங்கிரஸ், ம.ஜ.த இணைந்து 117 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருந்தும் ஆளுநரின் இந்த முடிவு விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால், ஆளுநரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆளுநரின் முடிவு ஒருதலைபட்சமானது என்பதால், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. காங்கிரஸின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இரவோடு இரவாக விசாரணை நடத்தியது. யாகூப் மேனன் தூக்கு விவகாரத்துக்குப் பின், நள்ளிரவில் வழக்கு விசாரணை நடைபெற்றது, அரிதாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில்,  ``எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நான் இருந்தால் நாளை காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் வரை பதவியேற்க மாட்டேன். ஆளுநரிடம் அளித்துள்ள கடிதம்தான் எடியூரப்பாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும். அதில் 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என அவர் குறிப்பிட்டிருப்பார். ஆளுநரின் அதிகாரபூர்வ அழைப்பில்கூட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை" எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!