வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (17/05/2018)

கடைசி தொடர்பு:10:14 (17/05/2018)

இன்னொரு நெடுவாசலாகிறதா கரூர் கிராமங்கள்..? கொந்தளித்த விவசாயிகள்!

          

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எழுந்த கடும் போராட்டங்களுக்குப் பிறகு, அந்தத் திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கரூரில் உள்ள சில கிராமங்களில் இரவு நேரங்களில் ஆழ்குழாய்க் கிணறுமூலம் ஆய்வு செய்ததால், மக்கள் பீதியில் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுக்க முயன்றதால், அங்குள்ள விவசாயிகளின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பகுதி விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

இதன் வாயிலாக, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிறுவனம் பின்வாங்கியது. வேறு இடம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், ஆழ்குழாய் போட்டு ஆய்வு செய்ததால், அந்தப் பகுதி மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில், சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகளும் பெண்களும் திரண்டு  சென்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். 

அந்த ஊர் பெண்கள், ``கரூர் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள கிராமங்களான அரங்கநாதன்பேட்டை, நெரூர், தென்பாகம் உள்ளிட்ட கிராமங்களில், இரவு நேரத்தில் திடீர்னு ராட்சத இயந்திரங்கள் வந்து இறங்கி ஆழ்குழாய் கிணறுகள் போட்டு ஆய்வு செய்கின்றன. சில நாள்களாக, எங்களின் அனுமதியில்லாமல் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக இப்படி ஆய்வுசெய்கிறார்கள். நாங்க சந்தேகப்பட்டு கேட்டதுக்கு, சரியான பதில் இல்லை. அதனால், இன்னொரு நெடுவாசலாக எங்க ஊரை ஆக்கப் பார்க்கிறார்களோன்னு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவிரி ஆற்றில் தண்ணீர் வரலை. அதோடு, தமிழ்நாட்டிலேயே அதிகமா மணல் கொள்ளை கரூர் மாவட்டத்தில்தான் நடந்திருக்கு. களிமண் தெரியும் அளவுக்கு மண்ணை அள்ளிட்டாங்க.

இதனால், காவிரிக் கரை ஓரத்திலேயே 400 அடிக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சுட்டு. இதுல இயற்கை வளங்களை எடுக்க முயன்றால், எங்கள் பகுதி சஹாரா பாலைவனமாக மாறிவிடும். எங்க உயிரைக் கொடுத்தாவது இதைத் தடுப்போம்' என்றார்கள். 

பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரனும், ``திருட்டுத் தனமாக நடக்கும் இந்த ஆய்வை நிறுத்தாவிட்டால், ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்'' என்றார்.