வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (17/05/2018)

கடைசி தொடர்பு:11:05 (17/05/2018)

தேவகவுடா Vs வஜுபாய் - 22 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

தேவ கவுடாவை 22 ஆண்டுகள் கழித்துப் பழிவாங்கியுள்ளார் கர்நாடக ஆளுநர் வஜுபாய்

தேவகவுடா Vs வஜுபாய் -  22 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

தேவ கவுடா, டந்த 1996-ம் ஆண்டு பிரதமராக இருந்தார். அப்போது, குஜராத்தில் முதன்முறையாக வெற்றிபெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்தது. குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக தற்போதைய கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா இருந்தார். குஜராத் மாநில முதல்வராக சுரேஷ் மேத்தா அமர்ந்தார். 

vajubhai vala

குஜராத்தில் உள்ள 182 இடங்களில், பாரதிய ஜனதா கட்சிக்கு 121 தொகுதிகள் கிடைத்திருந்தன.  இந்தச் சமயத்தில், பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால், மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா பாரதிய ஜனதா கட்சியை உடைத்து, ராஷ்ட்ரிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கினார். தனக்கு 40 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி,  சுரேஷ் மேத்தா அரசின்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார். குஜராத் ஆளுநர், சுரேஷ் மேத்தாவை ஆதரவை நிரூபிக்க உத்தரவிட்டார். 

செப்டம்பர் 18-ந் தேதி, சுரேஷ் மேத்தா தனிப் பெரும்பான்மையை நிரூபித்தார். குஜராத் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால், நள்ளிரவில் சுரேஷ் மேத்தா, தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை ஆளுநரிடம் ஆஜர்படுத்தினார். எனினும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் சுரேஷ் மேத்தா அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பிரதமராக இருந்த தேவ கவுடா, குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்குப் பரிந்துரை செய்தார். முன்னதாக, குஜராத் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வஜுபாய்க்கு அளித்த உறுதி மொழியை தேவகவுடா மறந்தார். அப்போது, `ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது ' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த வஜுபாய்.  

காலங்கள் உருண்டோடின. தற்போது, கர்நாடகத்தில் ஆட்சியமைக்க மதச் சார்பற்ற ஜனதா தள கட்சிக்குப் போதிய ஆதரவு உள்ளது., எனினும், எடியூரப்பாவை முதல் அமைச்சராகப் பதவியேற்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்துள்ளார். எடியூரப்பாவும் இன்று காலை கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். சுமார்  22 ஆண்டுகளுக்குப் பிறகு, வஜுபாய்  தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேவகவுடாவைப் பழிவாங்கியுள்ளார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க