வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (17/05/2018)

கடைசி தொடர்பு:14:32 (17/05/2018)

முடிவுக்கு வந்த `குப்பைகூள' ரேஷன் அரிசி பிரச்னை

 

 

விகடன் இணையதளத்தில் பதியப்பட்ட செய்தியின் விளைவால் கிழக்கு அய்யம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் குப்பைகூளங்கள் கலந்து கொடுக்கப்பட்ட ரேஷன் அரிசி பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. 

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் கிழக்கு அய்யம்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நியாய விலைக்கடை அருகில் உள்ள தெற்கு அய்யம்பாளையம், காமநாயக்கனூர், நெற்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் பாத்தியப்பட்டது.

இந்த நான்கு கிராமங்களிலும் சேர்த்து 450 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியவர்கள். அதனால், அவர்களில் பெரும்பாலானோர் ரேஷன் பொருள்களை மட்டும் நம்பியுள்ளனர். இந்நிலையில், இந்த ரேஷன் கடையில் பச்சரிசியை மட்டும் போடுவதாகவும், அந்தப் பச்சரிசியையும் குப்பைகூளங்கள் கலந்து பச்சை நிறத்தில் போடுவதாகவும் பொதுமக்கள் புலம்பினர். பச்சரிசியைச் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கும்,முதியோர்களுக்கும் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் அல்லல்பட்டனர். அதோடு, மண்ணெண்ணெய், கோதுமை, உளுத்தம் பருப்பு, பாமாயில் என்று எந்தப் பொருளையும் பலருக்கும் தராமல் ஏமாற்றுவதாகக் கண்ணீர்விட்டனர். இவர்களின் பிரச்னையைப் பற்றி கடந்த 15 ம் தேதி விகடன் இணையதளத்தில்,``ரேஷன் அரிசியில் குப்பைகூளங்களைக் கலந்து தர்றாங்க!" - கலங்கும் மக்கள்' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். 


இந்தச் செய்தி பதிவான சில மணி நேரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் கவனத்துக்கு இந்தச் செய்தி போக, உடனே அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை முடுக்கிவிட்டார். பாலவிடுதி கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பறந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், கிழக்கு அய்யம்பாளையம் கிராமத்தில் இயங்கும் ரேஷன் கடையை ஆய்வு செய்தனர். மக்கள் சொன்ன அத்தனை குறைபாடுகளையும் உடனே சரி செய்வதாக வாக்குறுதி கொடுத்தனர். அதோடு மக்கள், அந்த ரேஷன் கடையில் பொருள்களை விநியோகிக்கும் நபரைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்க, `அந்த நபரை இனிமேல் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கமாட்டோம்' என்று வாக்குறுதி கொடுத்தனர். அதோடு, அந்த ரேஷன் கடைக்கு உட்பட்ட 450 ரேஷன் கார்டுகளில் அதிகப்பட்சமானவை தெற்கு அய்யம்பாளையத்தில்தான் உள்ளன. அதனால், அந்த ஊர் மக்கள், `எங்களுக்குத் தனியாக ஒருநாள் பொருள்கள் வழங்கணும்' என்று வைத்த கோரிக்கைக்கும், `உங்க ஊருக்கு ஒருநாள் பகுதிநேரமாகப் பொருள்கள் விநியோகிக்கப்படும்' என்று அத்தனை கோரிக்கைக்கும் செவிசாய்த்துவிட்டு சென்றனர்.


இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் மக்கள், ``எங்களின் நீண்டநாள் பிரச்னை இது. இந்தப் பிரச்னைகளைச் சரிபண்ணச் சொல்லி, நாங்களும் பார்க்காத அதிகாரி இல்லை; வைக்காத கோரிக்கை இல்லை. ஒண்ணும் நடக்கலை. ஆனா, விகடன் இணையதளச் செய்தி எங்க ஒட்டுமொத்தப் பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கு. நடவடிக்கை எடுக்க வைத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், விகடன் இணையதளத்துக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்றார்கள் உணர்ச்சிப்பெருக்கோடு!.