புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

ரங்கசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமியின் வீடு திலாஸ்பேட்டையில் உள்ளது. மாலை நேரங்களில் அன்றாடம் ரங்கசாமி டென்னிஸ் விளையாட வெளியில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்குக் கோரிமேட்டில் இருக்கும் டென்னிஸ் மைதானத்துக்கு விளையாடச் சென்றார். இந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் சென்னை போலீஸ் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் ``புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறோம்” என்று பேசிவிட்டு உடனே தொடர்பைத் துண்டித்திருக்கிறார். 

வெடிகுண்டு

உடனே உஷாரான சென்னை போலீஸ் புதுச்சேரி போலீஸ் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைச் சொல்லி `அலர்ட்’ செய்தது. அதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் அஜீத் உடன் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்த புதுச்சேரி போலீஸ் அவரது வீட்டை சல்லடையாகச் சோதனை செய்தனர். அதேபோல அவரது காரையும் முழுமையாகச் சோதனையிட்டனர். ஆனால், எங்கும் வெடிகுண்டு இல்லாததால் வதந்தி என்று முடிவு செய்தனர் புதுச்சேரி போலீஸ்.

மிரட்டல்

அதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் என்று கோரிமேடு போலீஸ் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் வெளியானதும் அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அசோக் ஆனந்து, நேரு போன்றவர்களும், ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!