வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (17/05/2018)

கடைசி தொடர்பு:13:23 (17/05/2018)

`காங்கிரஸை அவமானப்படுத்த வேண்டியதில்லை!’ - சீனியர்களிடம் `கறார்’ காட்டிய ஸ்டாலின் 

`தமிழ்நாட்டிலும் நாம் கொடுக்கும் சீட்டுகளைப் பெற்றாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. நமக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்வோம்’ என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். 

ஸ்டாலின்

ர்நாடக முதல்வராக பா.ஜ.கவின் எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாட்டைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர் குலாம்நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். ' தமிழ்நாட்டிலும் நாம் கொடுக்கும் சீட்டுகளைப் பெற்றாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. நமக்குத் துரோகம் செய்த சில காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்வோம்' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். 

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 78 சீட்டுகளைப் பெற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமியை முதல்வராக்குவதற்கு சம்மதம் தெரிவித்தது காங்கிரஸ் தலைமை. ' எந்தச் சூழ்நிலையிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் சோனியா காந்தி உறுதியாக இருந்தார். ஒரே காரணம், கர்நாடகாவிலும் தோற்றுவிட்டால் ராகுலின் தலைமை மீது மற்றவர்கள் கேள்வி எழுப்பக் கூடும் என்பதுதான். அதற்கேற்ப, வியூகங்கள் அமைக்கப்பட்டன. மக்களும் நடக்கும் காட்சிகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கும் வகையில் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்' என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். கர்நாடகாவில் நடக்கும் காட்சிகளை கவனித்து வரும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், இதுதொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் விவாதித்திருக்கிறார்.

இதுகுறித்து தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவைத் தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு வேறுவழியில்லை. ராகுல்-திருமாவளவன் சந்திப்பையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி விவாதித்த செயல் தலைவர், ' காங்கிரஸ் கட்சியை மரியாதையுடன் நடத்துவோம். கொள்கை அடிப்படையில் நமக்கு விசுவாசமாக இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குத் தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் கொடுப்போம். கர்நாடக நிலவரத்தைப் பார்க்கும்போது, நாம் கொடுக்கும் சீட்டுக்களை அவர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். நமக்குத் துரோகம் செய்தவர்களை எப்படிக் கவனிப்பது என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்குவோம்' எனப் பேசியிருக்கிறார். இந்த விவாதத்தில் பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், ' காங்கிரஸ் இருந்தால்தான் சிறுபான்மை வாக்குகள் வந்துசேரும் என எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மை மக்களிடையே தினகரனுக்கோ எடப்பாடி பழனிசாமிக்கோ பெரிய செல்வாக்கு இல்லை. 

திருநாவுக்கரசர்

மோடியின் சென்னை வருகையின்போது கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தோம். அதேநேரம், நமது செயல்பாட்டை தினகரன் விமர்சித்தார். அவர் பேசும்போது, ' என்னதான் இருந்தாலும் அவர் ஒரு பிரதமர். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு' என்றார். அவரது இந்தச் செயல்பாட்டை தமிமுன் அன்சாரியும் சுட்டிக் காட்டியிருக்கிறார். அன்சாரி, நமக்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். அதேபோல், தினகரனை ஒரு மாற்று ஏற்பாடாக டெல்லி காங்கிரஸ் தலைமையும் பார்க்கவில்லை. பா.ஜ.க எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என நினைக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தஞ்சை, சிவகங்கை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில்தான் காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இந்தத் தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், சமுதாய வாக்குகளைப் பெறுவதற்காக தினகரனோடு கூட்டணி வேண்டும் என்கிறார்கள்.

சுமார் 24 மக்களவைத் தொகுதிகளில் அவர்களுக்கு எந்தவித செல்வாக்கும் இல்லை என்பதை காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவார்கள். இந்த ஒன்பது தொகுதிகளைத் தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ள 75 சதவீத காங்கிரஸ் நிர்வாகிகள் தினகரனுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. அவரை ஒரு பெரிய சக்தியாக யாரும் கருதவில்லை. இதை தலைமைக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். நமது கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் சீட் கொடுத்தால், நமக்கு வர வேண்டிய காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் வந்து சேராது. அவர்களது செல்வாக்கு ஏற்ப சீட்டுக்களை கொடுப்போம். ஒரேயடியாக அவமானப்படுத்தி சீட் கொடுத்தால், நமக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்'  என விவரித்திருக்கிறார். இந்தக் கருத்தை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டார்" என்றார் விரிவாக. 

" கர்நாடகாவில் நடக்கும் காட்சிகளைத் தொடர்ந்து, பா.ஜ.கவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். ' மம்தா, சந்திரசேகர ராவ் என மூன்றாவது அணியின் முயற்சிக்கு தி.மு.க செவிசாய்த்துவிட்டால், மீண்டும் பா.ஜ.கவே மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிடும். அதற்கான கதவுகள் திறந்துவிடக் கூடாது' என்ற அடிப்படையிலேயே ராகுலை சந்தித்தார் திருமாவளவன். வி.சி.க நடத்தக் கூடிய 'தேசம் காப்போம்' மாநாட்டுக்கு வருமாறு ராகுலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதே விழாவில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இந்த மேடையை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான தொடக்க மேடையாக மாற்றும் முடிவில் இருக்கிறார் திருமாவளவன். தி.மு.க எடுக்கப்போகும் முடிவுகளைப் பொறுத்துத்தான் அடுத்தடுத்த அரசியல் காட்சிகள் அரங்கேற இருக்கின்றன" என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்.