வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (17/05/2018)

கடைசி தொடர்பு:13:35 (17/05/2018)

ரூ.4,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் அபகரிப்பு! - திருத்தொண்டர் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கோயில் நிலம் ஆக்கிரமித்து கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பூஜைகளுக்காக எழுதி வைக்கப்பட்ட சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டது குறித்து திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் அவர் கூறுகையில், "மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையம் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கோயில் நிலம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை இன்றைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோயில் சாமிகளுக்கு பூஜைக்காக வழங்கபட்ட நிலங்களை ஆவணங்களை முறைகேடாக மாற்றம் செய்து விற்பனை செய்துள்ளனர் .தமிழகம் முழுவதும் பல கோயில்களில் பல இடங்களை அரசியல் வாதிகளும் ரவுடிகளும் ஆக்கிரமித்துள்ளனர்.

எங்களுடைய ஆய்வுப் பணி இன்று தொடங்கி மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி என அனைத்துக் கோயில்களுக்கும் சொந்தமான இடத்தை ஆய்வு செய்ய இருக்கிறோம்.பொது மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு பற்றி தகவல்களை எங்களுக்கு அளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்றும் கூறினார். பொது மக்கள் புகார் அளித்தால் அவர்கள் அளிக்கும் புகார்மீது உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களைப் பற்றிய விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார். பொதுமக்கள் rktnindia@Gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.