விவசாயக் கடன் தள்ளுபடி! - எடியூரப்பாவின் முதல் கையெழுத்து

கர்நாடகாவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள எடியூரப்பா முதல் கையெழுத்தாக விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.

 முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. அதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், `எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே கர்நாடகாவின் 23 வது முதல்வராகப் பா.ஜ.க-வின் எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார். பா.ஜ.க-வின் பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

எடியூரப்பா பதவியேற்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.த மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக சட்டசபை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்ற கையோடு நேராகக் கர்நாடகா சட்டசபைக்கு வந்து தன் வேலையைத் தொடங்கினார் எடியூரப்பா. விவசாயிகளின் நலன் கருதி ரூ. 5,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கியுள்ள விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து ரூ.56,000 கோடி மதிப்புள்ள கடன் தள்ளுபடி கோப்பில் தனது முதல் கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!