வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (17/05/2018)

கடைசி தொடர்பு:14:03 (17/05/2018)

முதல்வர் வருகை - 4 மணி நேரம் முடக்கப்பட்ட கோவை..!

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

காவல்துறை அருங்காட்சியகம்


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கோவையில் 1918-ம் ஆண்டு எஃப்.ஏ ஹாமில்டன் என்ற போலீஸ் அதிகாரி, ஹாமில்டன் போலீஸ் கிளப்பைத் தொடங்கினார். ஆனால், நாளடைவில் இந்தக் கட்டடம் பராமரிப்பின்றிபோனது. இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் (தற்போது திருச்சி போலீஸ் கமிஷனர்) இந்தக் கிளப்பைப் பழைமை மாறாமல் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கத் திட்டமிட்டார். இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், இதை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில், விடுதலைப்புலிகளின் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல், மலையூர் மம்பட்டியான், வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள், போலீஸாரின் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.


முதல்வரின் வருகைக்காகப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தன. கோவை விமான நிலையம் ஆரம்பித்து நகரின் பெரும்பாலான பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, பேனர் கலாசாரத்தில், கடந்த நவம்பர் மாதம்தான் ரகு என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். ஆனால், அவர் உயிரிழந்த 6 மாதங்களில் மீண்டும் பேனர் கலாசாரம் முளைத்துள்ளது.

அதேபோல, முதல்வர் வருகைக்காக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், பேருந்து கிடைக்காமல் நடந்து சென்றனர். அதேபோல, ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மதியம் 12.30 மணிவரை திறக்கப்படவில்லை. காலை 10.15 மணிக்கு முதல்வர் வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்குதான் அருங்காட்சியகத்துக்கு வந்தார். முதல்வரின் வருகைக்காக, நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள், மினிடோர்களிலும் வேன்களிலும் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனால், முதல்வர் காவல்துறை அருங்காட்சியகத்துக்கு வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், முதல்வரின் வருகையையொட்டி, கோவை முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, காவல்துறை அருங்காட்சியகத்தை சுற்றியுள்ள கட்டடங்களின் மொட்டை மாடிகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாகக் கொளுத்தும் வெயிலில் நின்றபடி, பைனாகுலர் கேமராவால் கண்காணித்து வந்தனர். 


கோவையில் அவர் இருந்தது என்னவோ ஒரு மணி நேரம்தான். ஆனால், அதற்காக, கோவை முடக்கப்பட்டது 4 மணி நேரம்.