வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (17/05/2018)

கடைசி தொடர்பு:16:01 (17/05/2018)

`12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்?’ உயர் கல்விக்கு வழிகாட்டிய கல்வியாளர்கள்!

`12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்?’ உயர் கல்விக்கு வழிகாட்டிய கல்வியாளர்கள்!

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்து எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம் என்பதுபோன்ற மனப்போராட்டத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை முகாமில், கல்வியாளர்களும் துறை வல்லுநர்களும் ஆலோசனை வழங்கினர். விகடன் பிரசுரம் மற்றும் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி ஆகியவற்றின் சார்பில், ப்ளஸ்-டூ மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த இலவச ஆலோசனை முகாம் சென்னையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.

கல்வி வழிகாட்டி

இந்த முகாமில், கல்வியாளர் டாக்டர் எஸ்.எஸ்.எம்.அப்துல் மஜித் பேசும்போது, ``உங்களது வருங்காலத்தை தீர்மானிக்கக்கூடிய, உங்கள் வாழ்க்கையை வசதியாக்கக்கூடிய அடுத்தகட்டத்தை முடிவுசெய்வதற்குரிய முக்கியமான காலகட்டம் இது. எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது? எந்தக் கல்லூரியில் சேர்வது? என்பதுதான் இப்போது பிள்ளைகள் - பெற்றோர்கள் முன் நிற்கும் முக்கியமான கேள்வி. பொறியியல் துறை, மருத்துவத்துறை, கலை மற்றும் அறிவியல் கல்வி என்ற இத்துறைகளுக்குள்தாம் அனைத்துப் படிப்புகளும் வருகின்றன. இந்தப் படிப்புகளின்மீது உங்களுக்குள் புதைந்துகிடக்கும் ஆர்வத்தை நீங்கள் உணர வேண்டும். உடன் இருப்பவர்கள் என்பதால், வகுப்பு ஆசிரியர்களும் பெற்றோர்களும் அந்த ஆர்வத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

 பொறியியல் துறையைப் பொறுத்த அளவில் மாணவர்களுக்கு எந்தப் பொறியியல் பிரிவில் ஆர்வம் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அதோடு, அந்தப் பிரிவைப் படித்து முடித்த பிறகு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும். அதாவது, கௌரவமான சம்பளமும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இளைஞனுக்கு சமூகத்தில் ஓர் அந்தஸ்து, அங்கீகாரம், மரியாதை கிடைக்கும். அந்த வகையில்தான் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி (கம்ப்யூட்டர்), மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்குத்தான் நிறைய வேலைவாய்ப்பு உள்ளதாக ஓர் மனப்பான்மை பொதுவாக இருக்கின்றது. அது உண்மையல்ல. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மெக்கானிக்கல் பொறியாளர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இங்கு தொழிற்சாலைகள் இல்லை. எனவே, இத்தகைய கள நிலவரத்தை ஆராய்ச்சி செய்து பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். அதாவது, எந்தப் பாடப்பிரிவை மாணவர்கள் குறைந்த அளவில் படிக்கிறார்கள்? எந்தப் பிரிவுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன... என்று ஆய்வுசெய்து பாடத்தை எடுக்க வெண்டும். 

மஜித்என்னுடைய 30 ஆண்டு கால கல்விச் சேவையில் தமிழகம் கல்வித்துறையில் நன்கு முன்னேறி உள்ளது என்பதை தைரியமாகச் சொல்ல முடியும். அதே நேரத்தில், பொறியியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்வதில் வடமாநிலத்தவரோடு ஒப்பிடுகையில், தமிழ் மாணவர்கள் பின்தங்கியே உள்ளார்கள். எனவே, பொறியியல் பாடத்தைத் தேர்வு செய்யும்போது, பொறியியல் பிரிவில் புதிய படிப்புகள் என்னென்ன வந்துள்ளன என்று பார்க்க வேண்டும். அதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பஸ்ஸில் போவதுபோல,  இனி விமானப் போக்குவரத்து இருக்கும். இரண்டாம் கட்ட நகரங்களுக்கு இப்போது விமான சேவை விரிவுப்படுத்தப்பட்டுவருகிறது.  எனவே, வருங்காலத்தில் விமானத்துறை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

இந்தியா போன்ற வளர்ந்துகொண்டிருக்கும், ஜனத்தொகை நிறைந்த நாடுகளில் ஆட்டோ மொபைல் தேவை அதிகம். எனவே, ஆட்டோ மொபைல் துறையில் வல்லுநர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதனால்தான் உலக ஆட்டோமொபைல் கம்பெனிகள் சென்னையில் தங்களது தொழிற்சாலைகளை அமைத்துள்ளார்கள். இது வளர்ந்துவரும் துறை. எனவே, ஆட்டோ மொபைல் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். போர்டு, நிசான், ஹூண்டாய் போன்ற கம்பெனிகளுக்கு ஆட்டோ மொபைல் பொறியாளர்கள்தாம் அதிக அளவில் தேவை. அவர்களின் தேவைக்கு ஏற்ப ஆட்டோ மொபைல் பொறியாளர்கள் இல்லாததால்தான், மெக்கானிக்கல் ஆட்களை எடுத்து அவர்களுக்குப் பயிற்சிகொடுத்து வேலையில் வைத்துக்கொள்கிறார்கள். 

மேலும், பிளாஸ்டிக் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி, ரப்பர் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இத்தகைய தொழில் சார்ந்த படிப்புகளைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும். `வடிவமைப்பு பொறியியல் துறை' ( Engineering Design Courses) இப்போது வந்துள்ளது. இதில், உள் அலங்காரம் உள்ளிட்டப் பல பிரிவுகள் உள்ளன. இந்தப் படிப்பைப் படித்தால், வேலைவாய்ப்பும் உள்ளது; சொந்தமாகத் தொழிலும் தொடங்கலாம். இப்படி, பல்வேறு கூறுகளை அலசி ஆராய்ந்து படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்'' என்று ஆலோசனை வழங்கினார்.

நிலாமுதீன்சட்டத்துறை பேராசிரியர் டாக்டர் கே.நிலாமுதீன், ``சட்டப்படிப்பு முடித்தவுடன் நீதித்துறையில் போட்டித் தேர்வெழுதி நீதிபதி வேலையில் சேரலாம். வங்கிகள், மத்திய அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டித்தேர்வெழுதி கைநிறைய நல்ல சம்பளத்தில் வேலையில் சேர முடியும். அனைத்துத் துறைகளுக்கும் துறை சார்ந்த சட்ட வல்லுநர்களுக்கும் இப்போது மிகுந்த வரவேற்பு உள்ளது; நல்ல மரியாதை உள்ளது. உலகம் முழுவதும் புதுப்புது கண்டுபிடிப்புகள்  வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் நிறையத் துறைகளில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதை நமதாக்கிக்கொண்டு, உலக அளவில் உரிய சட்ட அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போதுதான், அந்தக் கண்டுபிடிப்பினால் கிடைக்கும் லாபத்தைக் கண்டுபிடிப்பாளர் அனுபவிக்க முடியும். அதற்கு இன்றை தினம், சட்ட நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை போன்ற பிரிவுகளுக்கு வக்கீல் பணி மகத்தானது. இதற்கு ஆலோசனை வழங்குவதற்கே லட்சக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. எனவே, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் என்னவாக வேண்டும்? எவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்கு இப்போதே திட்டமிட்டு படிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு என்று தனித்தனியாக மார்க்கெட் உள்ளது. அதற்குரிய எதிர்காலம் இருக்கிறது. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும் நாம் சேரப்போகும் கல்வி நிறுவனத்தின் பாரம்பர்யம், எடுக்கப்போகும் பாடப்பிரிவுகளுக்குப் போதுமான, தரமான ஆசிரியர்கள் உள்ளார்களா? என்பதை அலசி ஆராய்ந்து சேருங்கள். நீங்கள் படிக்கும் படிப்போடு, அதற்கு தேவையான கூடுதல் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டால், படிப்பு முடித்தவுடன் நல்ல வேலை உறுதி'' என்றார்.
சத்யஶ்ரீ பூமிநாதன்கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி மேலாண்மை இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், ``இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அதில் சிறப்புமிக்கதாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ் தேர்வில், மற்றவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும். மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராக வேண்டும். இத்தேர்வில் வெற்றிபெறுவதற்கு பெரிய குடும்பப் பின்னணி, பெரிய அந்தஸ்து, நல்ல உடல் தோற்றம் இருக்க வேண்டும் என்பதெல்லாம் மாயை. திட்டமிட்ட கடின உழைப்பு இருந்தால், யார் வேண்டுமாலும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறலாம். ஆர்வம், தாகம் என்ற இந்த இரண்டும்தாம் உந்து சக்தி, தூண்டுகோல். இத்தேர்வுக்கு வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியம். கல்லூரித் தேர்வைப் போல் அல்லாமல் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தினமும் செய்தித்தாள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது, பொறியியல் படிப்பு முடித்தவர்கள், ஐ.ஏ.எஸ் தேர்வில் அதிக அளவில் வெற்றிபெறுகிறார்கள். காரணம், அந்தப் பதவிக்குத் தேவையான ஆளுமைப் பண்பு, பகுத்து அறிதல், கூர்நோக்குப் பார்வை ஆகியவை பொறியியல் பட்டதாரிகளிடம் இயல்பாகவே வந்துவிடுகிறது. எனவே, பொறியியல் படித்த பிறகு ஐ.ஏ.எஸ் தேர்வு நல்ல சாய்ஸ். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இது, தமிழக அரசுப் பணியில் மிகவும் அடிப்படை பணி. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிதான் குறைந்தபட்ச கல்வித்தகுதி. ஆசிரியர்கள், பொறியியல் படித்தவர்கள் எல்லாம் இதற்கும் விண்ணப்பித்திருந்தார்கள். நாட்டின் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தமிழகத்திலிருந்து கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதுவும் ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் படித்தோரில் பலரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. ஐ.ஏ.எஸ் படிக்க வருவோர் எல்லாம் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நடுத்தர மாணவர்கள்தாம். அதில், அதிக அளவில் பொறியியல் மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் எளிதாக ஜெயிக்கிறார்கள். அதற்கு இப்போதே திட்டமிடுங்கள்'' என்று வழிகாட்டினார்.

பாரதி கிருஷ்ணகுமார் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ``போட்டி நிறைந்த உலகத்தில் இப்போதைய பிள்ளைகள் பிறந்திருக்கின்றார்கள். உழைத்துப் படித்து உயருகின்ற வாழ்க்கையைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போடக் கூடாது. வீட்டில், தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதுபோல பள்ளி -கல்லூரிகளில் மாணவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எனவே, நாமும் பள்ளி - கல்லூரிகள் போல வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் நூலகம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பிள்ளையைப் படிக்கச் சொல்லிவிட்டு பெற்றோர்கள் டி.வி பார்த்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருக்கக் கூடாது; பிள்ளைகள் படிக்க உதவியாக இருக்க வேண்டும். பசி என்றால் என்னவென்று அறிந்துகொள்ளும்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதற்காக அவர்களைப் பட்டினி போடச் சொல்லவில்லை. உயர்கல்வி விஷயத்தில், அவர்கள் விரும்பும் துறையில் படிக்க அனுமதிக்க வேண்டும். அதில் சிக்கல்கள் இருந்தால், அதுபற்றி எடுத்துச் சொல்லலாம். படிப்பை அவர்கள்மீது திணிக்கக் கூடாது. கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறை மாணவர்கள் புத்திசாலிகள். பெற்றோர்கள் நினைக்கும் துறையில் மாணவர்களைத் தள்ளினால் அவர்கள் படித்து முடிப்பார்கள்.  ஆனால், சாதனையாளர் என்று பெயர் எடுக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது. சமூகத்துக்கு சேவை செய்வதே உயர்கல்வி. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 5,000 டாக்டர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். பொறியியல் முடித்து ஒன்றரை லட்சம் பேர் வெளியே வருகிறார்கள். ஆனால், ஒருசிலரே சிறந்தவர்கள்; நிபுணர்கள் என்று பெயர் எடுக்கிறார்கள். எனவே, படித்து முடித்ததோடு படிப்பை நிறுத்திவிடக் கூடாது. துறை சார்ந்து தொடர்ந்து படிக்க வேண்டும்'' என்று பேசினார்.


நெடுஞ்செழியன் உயர் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், ``பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், இன்றைய மாணவர்கள் உள்ளனர். அதனால்தான், குறிப்பிட்ட படிப்புகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர். படிப்பை அவர்கள் மீது திணித்து, அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றனர். கல்வி சார்ந்த வாய்ப்புகளை, பெற்றோரும், ஆசிரியரும் அறிந்திருந்தால்தான், மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க முடியும். `பிளஸ் 2'க்குப் பின், 80 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும் என்றாலும், 75 வகையான தேர்வுகளுக்கு, மதிப்பெண் முக்கியமில்லை. அதில், வெற்றி பெறும் மாணவர்களும், பல்வேறு துறைகளில் படித்து சாதனை புரிகின்றனர். `பிளஸ் 2'க்குப் பின், பலர், நல்ல படிப்பைப் படிக்க நினைத்து, வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.

ஆனால், நல்ல கல்வி நிலையமா என்பதைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். அதனால், மாணவர்கள் படித்த பின், நல்ல வேலை கிடைக்காமலும், நல்ல சம்பளம் கிடைக்காமலும் கடன்பட்டு, அவர்களின் கனவு சிதைவுறுகிறது. சாதாரணப் படிப்பை முடித்துவிட்டு, நல்ல வாய்ப்புகளை அறிந்து, பெரிய வேலையில் சேருவோர், நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல இடங்களில், ஒருங்கிணைந்த படிப்புகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில் நல்ல எதிர்காலம் உள்ளது. ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒரே துறைக்கு மட்டும் மாணவர்கள் முயற்சி செய்யாமல், கற்பித்தல், அவசரகால மருத்துவம், வானிலை, நிலவியல், குரலியல், மூளை ஆய்வியல், நரம்பு மருத்துவம் உள்ளிட்ட பல துறை சார்ந்த படிப்புகளைப் பற்றித் தெரிந்து, அவற்றில் சேர முயற்சி செய்ய வேண்டும். இப்போது, அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கவுன்சலிங் முறையைக் கொண்டுவந்துள்ளது. பொறியியல் பாடத்தையும் கல்லூரியையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த முறையில் ஆபத்துகள் அதிகம்'' என்று ஆலோசனை வழங்கினார்.

எதிர்காலத்தை நல்ல முறையில் தேர்வு செய்வோம்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்