`எதையும் கண்டுகொள்ளாமலிருக்க மாதந்தோறும் மாமூல்! - வசமாகச் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 

சென்னையில் சமூக விரோதச் செயல்களைக் கண்டுகொள்ளாமலிருக்க இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு இன்ஸ்பெக்டர்களும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

போலீஸ்


தமிழக போலீஸாருக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குட்கா வழக்கு குடைச்சலைக் கொடுத்திருக்கும் நேரத்தில் சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்களின் மாமூல் விவகாரம் உயரதிகாரிகளின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு இன்ஸ்பெக்டர்களும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் உள்ளது அந்த போலீஸ் பிரிவு. அதில் பணியாற்றிய இரண்டு இன்ஸ்பெக்டர்களின் கட்டுப்பாட்டில் 160 மசாஜ் சென்டர்கள் உள்ளன. அதில் பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதைக் கண்டுகொள்ளாமலிருக்க சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்தத் தகவல் சென்னை போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குத் தெரியவந்ததும், சில நாள்களுக்கு முன்பு பெண் போலீஸ் அதிகாரி டீம் அதிரடியாகச் சென்னையில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தியது. அப்போது, `நாங்கள்தான் மாதந்தோறும் மாமூல் கொடுக்கிறோமே... பிறகு, ஏன் ரெய்டு நடத்துகிறீர்கள்' என்று சில மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களை கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த போலீஸ் டீம், பெண் போலீஸ் அதிகாரி முன் ஆஜர்படுத்தியது. மசாஜ் சென்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்த மாமூல் பட்டியலைக் கேட்டு வாயடைத்துப் போயுள்ளார் அந்தப் பெண் அதிகாரி. உடனடியாக இந்தத் தகவல் உயரதிகாரிகளின் கவனத்துக்கு ஆதாரத்துடன் கொண்டு செல்லப்பட்டது. உயரதிகாரியும் விசாரித்துவிட்டு சம்பந்தப்பட்ட இரண்டு இன்ஸ்பெக்டர்களையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில்தான் அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாமூல் விவகாரத்தில் இடமாற்றப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னையில் வசூல் மழை கொழிக்கும் காவல் நிலையங்களுக்குதான் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். அங்கேயும் இவர்கள் கை நீட்டுவார்கள். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களை ஏன் காத்திருப்பு பட்டியலில் வைக்கவில்லை என்பதுதான் எங்களின் கேள்வி" என்றனர். 

 இடமாற்றத்திலும் சில உயரதிகாரிகள் கவனிக்கப்பட்டதாகக் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பரவலாகப் பேச்சு உள்ளது. 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!