வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (17/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (17/05/2018)

"ஒரு கோடி பரிசு!" - அதிகாரிகளுக்கு சவால்விட்ட விவசாயச் சங்கங்கள்

     

'உயர் மின் அழுத்த கோபுரங்களால் எங்களுக்கோ விவசாயத்துக்கோ பாதிப்பு இல்லை' என்று நிரூபித்தால், அதிகாரிகளுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக விவசாயச் சங்கங்கள் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. 

தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி,ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், காற்றாலை மற்றும் சோலார் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தை மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் வழியாக சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கும் கொண்டுபோகும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையத்தை திருப்பூர் மாவட்டம் புகளூரில் அமைத்து வருகிறார்கள். இதற்காக, தமிழகம் முழுக்க 30 உயர்மின் கோபுரப் பாதைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. முதல்கட்டமாக, இப்போது 9 மின்பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றன. இதன் பின்னே அதானி குழுமம் இருப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது. இந்த மின்பாதைகள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் வழியே கொண்டுசெல்லப்பட இருப்பதால், மனிதர்களுக்கும், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் கொந்தளித்து வருகிறார்கள். 

 'பூமிக்கடியில் கேபிள்களை அமைத்து, வெளிநாடுகள், நம் நாட்டு மாநகரங்களில் கொண்டுசெல்வதைப் போல மின்சாரத்தைக் கொண்டு போகணும்' என்றபடி விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராடிவருகிறார். கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நடைமுறையையும் செயல்படுத்தாமல், இந்தத் திட்டத்தை அதிரடியாகச் செயல்படுத்துவதாகவும் விவசாயிகள் புலம்புகிறார்கள். அதிகாரிகள், 'மின்பாதை செல்வதால் மனிதர்களுக்கோ, விவசாயத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை' என்று சொல்லிவருகிறார்கள். இதனால்,கொதித்தெழுந்த உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், அதிகாரிகளுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்கள்.

அந்த அறிவிப்பில் ,'உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அருகில் அல்லது அடியில் வசிப்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், உயர்மின் கோபுரங்களை விவசாய பூமியில் அமைப்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை என்றும்  நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படும்' என்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.