வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (17/05/2018)

`எஸ்.வி.சேகரை எப்ப சார் கைது செய்வீங்க!' - பதிலளிக்காமல் பறந்த முதல்வர், டி.ஜி.பி..!

எஸ்.வி.சேகரை எப்போது கைது செய்வீர்கள் என்ற கேள்விக்கு, முதல்வரும் டி.ஜி.பி-யும் பதிலளிக்காமல் சென்றனர். 

காவல்துறை அருங்காட்சியகம்

‌பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக அவரை கைது செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அவரை கைது செய்ய வேண்டுமென போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, எஸ்.வி.சேகர் தலைமறைவானார். மேலும், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜாமீன் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஓர் நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரும் கலந்து கொண்டார். இதையடுத்து, காவல்துறை, அவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, கோவையில் காவல்துறை அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக டி.ஜி.பி ராஜேந்திரனிடம், 'எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை. அதில் அரசியல் அழுத்தம் இருப்பது உண்மைதானா' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு அவர்கள் இருவருமே பதில் கூறாமல் வேகவேகமாகச் சென்றுவிட்டனர்.