வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (17/05/2018)

கடைசி தொடர்பு:08:16 (18/05/2018)

`நீட் தேர்வை முன்னிறுத்தி வினாத்தாள் தயாரித்தது சரியா?' - கல்வி அமைச்சரைச் சாடும் கல்வியாளர்கள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை மட்டும் முன்வைத்து ப்ளஸ் டூ வினாத்தாள் தயாரிக்கப்பட்டது சரியல்ல. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் விகிதம் குறையும் என எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள். 

தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய ப்ளஸ் டூ பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தேர்வை ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதினர். முந்தைய காலகட்டங்களைவிடவும் வினாத்தாள்கள் மிகக் கடினமானதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

நீட் ரமேஷ் பிரபாஇந்நிலையில், நேற்று வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள், கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தேர்வில் 91.1 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுகுறித்து நேற்று பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட், ஜே.இ.இ, ஜே.இ.இ அட்வான்ஸ் போன்ற தகுதித்தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது' எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபாவிடம் கேட்டோம். 'அறிவியல் துறையில் மருத்துவம் என்பது ஒரு பகுதி மட்டும்தான். விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். இதனால், நீட் என்னும் ஒரு தேர்வை மட்டும் முன்னிறுத்தி, திட்டமிட்டு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டது என்று கூறுவது சரியானதல்ல. நீட் சோமசுந்தரம்இது தவறான அணுகுமுறை. எட்டு லட்சம் மாணவர்களில் ஒரு லட்சம் மாணவர்கள் மட்டும்தான் போட்டித் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

மீதம் உள்ள ஏழு லட்சம் மாணவர்கள் கலை அறிவியல், வணிகவியல், மானுடவியல் போன்ற துறைகளைத் தேர்வு செய்கின்றனர். இதனால், மருத்துவம் அல்லாத வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்' என்றார். இதையடுத்து, கல்வி ஆலோசகர் சோமசுந்தரத்திடம் பேசினோம். 'தேர்ச்சி சதவிகிதம் குறையக்கூடாது. தேர்வுத் தாள்கள் எளிதாகவும் அதேசமயம், சென்டம் எடுப்பதுக்குக் கடினமாக இருக்க வேண்டும். ஆனால், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படக் கூடாது. வினாத்தாள்கள் கடினமாக தயாரிக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்காகத் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் பயிற்சியைவிட அரசுப் பள்ளிகளில் வழங்கும் பயிற்சிகள் குறைவுதான். இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.