கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் மவுசு! | This year's enrollment in arts and science colleges is high

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (17/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (17/05/2018)

கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் மவுசு!

தமிழகத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்த வருடம் பொறியியலை விடக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை அதிகமாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலை

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே மாணவர்களும் பெற்றோர்களும், அடுத்து என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரிகளில் சேரலாம்? எந்தப் படிப்புக்கு எவ்வளவு சிறப்பு என யோசனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ப்ளஸ் டூ மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன. அதில் 91.1 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான தேர்ச்சி விகிதம் வந்துள்ளது. அதிலும் 60 சதவிகிதம் பேர் 800-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக பொறியியல் படிப்புகளில் சேர தேவைப்படும் பாடமான கணிதம் மற்றும் அறிவியலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளன. அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு கட்-ஆப் இடையூறாக இருக்கும் என்பதால், இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் பலர் கணித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் பிரபா கல்வி மணி நம்மிடம் பேசும்போது, “ பொறியியல் படிப்புகளில் வேலை வாய்ப்புகள் தற்போது முற்றிலும் இல்லை என்றவுடன் மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். பொறியியல் படித்தால் குறிப்பிட்ட வேலைக்கு மட்டுமே செல்ல முடியும். கலை மற்றும் அறிவியல் படித்தால் எந்த வேலைக்கும், போட்டித் தேர்வுக்கும் செல்லலாம். தற்போது தமிழகத்தில் அளவுக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் வந்துவிட்டன. லாப நோக்கத்துக்காக அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் துறையில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியியலுக்கு  இணையாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் அதிகமாக அரசு நிறுவ வேண்டும்.” எனக் கூறினார்.