வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (17/05/2018)

கடைசி தொடர்பு:15:57 (17/05/2018)

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் நடைமுறைக்கு மூடுவிழா? - ஐ.சி.சி-யின் புதிய திட்டம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறைக்கு முடிவுகட்ட சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐ,சி,சி) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டெஸ்ட் டாஸ்

டெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் பேட்டிங் அல்லது ஃபீல்டிங் செய்வது என்பதை முடிவு செய்யும் டாஸ் நடைமுறை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே கடந்த 1877-ல் நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து தொடர்ந்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளின் மரபாகத் தொடர்ந்து வரும் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறுகிறது. அந்தத் தொடரின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து டாஸ் நடைமுறையைக் கைவிட ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகக் கிரிக்கெட் தொடர்பான செய்திகளைப் பதிவிடும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையில் வரும் 28 மற்றும் 29-ம் தேதி நடைபெறும் ஐ.சி.சி கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை உள்ளூர் அணிகள் வெற்றி பெறுவதற்காக பிட்ச் உள்ளிட்டவற்றைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு கிரிக்கெட்டில் நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. உள்ளூர் அணிகளுக்கு இதனால் பலன் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு முடிவுகட்டும் விதமாகவும் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய விதியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு அணிகளின் கேப்டன்களுக்கு, முதலில் பேட்டிங்/ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெறும் ஐ.சி.சி-யின் கமிட்டிக்  கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.