நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள்! - ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ்

நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தி.மு.க. மாவட்டச்செயலாளர் சுரேஷ்ராஜன் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிமறுத்து சுரேஷ்ராஜன் வீட்டில் போலீஸ் நோட்டீஸ் ஒட்டியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடல் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் கடலலை தடுப்பணைகள் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வர்த்தக துறைமுகம்தான் குமரி மாவட்டத்துக்கு வேண்டும். மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சுரேஷ்ராஜன் தலைமையில் குமரி மாவட்டத்தின் 6 எம்.எல்.ஏ-க்களும் நாகர்கோவில் கலெக்டரிடம் அளித்தனர். ஆனால், மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வரும் 19-ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சுரேஷ்ராஜன் தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் அறிவித்திருந்தனர்.  இந்த நிலையில், 19-ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நேசமணிநகர் காவல் ஆய்வாளர் சாய் லட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள சுரேஷ்ராஜன் வீட்டில் அனுமதி மறுத்ததற்கான நோட்டீசை இன்று மதியம் ஒட்டினர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சுரேஷ்ராஜன் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் அறிவித்திருந்தனர்

அதில், `ஓகி புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்டும், கோவளம் - கீழமணக்குடி பகுதியில் அமையும் துறைமுகத்துக்கு எதிராக இதற்கு முன் நடந்த போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீதும் 16 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சுரேஷ்ராஜன் தரப்பினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!