வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:19:05 (17/05/2018)

கர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மூத்த வழக்கறிஞர்!

கர்நாடக ஆளுநர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு பதிவு செய்துள்ளார். 

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி

கடந்த மே 15-ம் தேதி வெளியான கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவில், பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது. 3  இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்திருந்தது. பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியமைக்க வியூகம் அமைத்துச் செயல்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மற்றும் பா.ஜ.க. சார்பில் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆளுநர் யாரை அழைப்பார் என அரசியல் கட்சிகள் அனைவரும் கர்நாடகாவை உற்று நோக்கிக்கொண்டிருந்த வேளையில், அம்மாநில ஆளுநர் 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இன்று காலை எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.கர்நாடகா ஆளுநரின் இந்த அழைப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஆகிய இரு கட்சிகளும் இன்று காலை கர்நாடக சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கர்நாடக ஆளுநருக்கு எதிராக மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ‘கர்நாடகாவில் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்ததின் மூலம் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்திவிட்டார். அவரின் பதவிக்கும் அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார்.’என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படியும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, கர்நாடக ஆளுநரின் செயலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஆகிய கட்சிகள்  தக்கல் செய்த மனு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, “கர்நாடக ஆளுநரின் இந்தச் செயல், ஊழலுக்குத் துணை போவதாக உள்ளது. நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. ஆளுநரின் செயல், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளதால் மட்டுமே இந்த வழக்கைத் தொடர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.