வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/05/2018)

பிரேதப் பரிசோதனையில் சடலத்தை சலவைத் தொழிலாளி தைத்த சம்பவம்...! மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்

துறையூர் அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறையில், இறந்தவரின் உடலைச் சலவைத் தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தைக்கும் வீடியோ வைரலானது. இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் கடந்த வாரம் கிணற்றில் விழுந்து பலியான ஒருவரின் உடலின் பிரேத பரிசோதனை துறையூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த உடலுக்கு பிரேத பரிசோதனை அறையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு மருத்துவமனை பணியாளர் உடலைச் தைக்காமல், அந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளியான வாலீஸ்புரத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர் தைத்தார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள்  இல்லாமல் வீரமணி கையுறை மட்டும் அணிந்தபடி உடலை துணி மூட்டையைத் தைப்பதுபோல் தைக்கிறார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் பணி செய்யாமல் அங்கு அரட்டையடிப்பதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

இதை பிரேத பரிசோதனையில் இருந்த ஊழியர் ஒருவரே வீடியோ எடுத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணி நேரத்தில் நோயாளிகளைக் கவனிக்காமல் பணியாளர்கள் அரட்டையடிக்க, இறந்தவரின் உடலைச் சலவைத் தொழிலாளியை வைத்துத் தைக்க வைப்பதா எனச் சர்ச்சை கிளம்பியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சம்ஷத் பேகம் தலைமையிலான குழுவினர், துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் துறையூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மூன்று பேரை சஸ்பெண்ட் செய்தும், சலவை தொழிலாளி வீரமணியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “துறையூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை, சலவைத் தொழிலாளி வீரமணியைக் கொண்டு செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, விசாரணை நடந்த மே 10-ம் தேதி பணியில் இல்லாத இரண்டு பணியாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளி வீரமணியை திருச்சி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்களான மதியழகன், பெரியசாமி மற்றும் வீடியோ எடுத்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவைச் சம்மந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து முதற்கட்டமாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்”என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க