வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (17/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (17/05/2018)

அரசுப் பள்ளி அருகில் ஓ.என்.ஜி.சி-யின் எண்ணெய்க் கிணறு! - கொந்தளிக்கும் பொதுமக்கள்

ONGC School visit

டெல்டா மாவட்டத்தின் பல இடங்களில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்து விவசாயிகளுக்கு பெரும் இடையூறு கொடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், தற்போது அரசுப் பள்ளி அருகில் எண்ணெய்க் கிணறு அமைக்க முடிவு செய்துள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

அரசுப் பள்ளி

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபடப்போவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், ஊழியர்களும் அறிவித்திருந்தனர். பள்ளிக்கூடம் அருகில் எண்ணெய்க் கிணறு அமைத்தால் இயந்திரங்களின் இரைச்சல், சுற்றுச்சூழல் மாசு இவற்றால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இதற்கு பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இந்நிலையில், நேற்று ஓ.என்.ஜி.சி குழு பொது மேலாளர்கள் குருராஜா, தண்டபாணி, சாய்பிரகாஷ், துளையிடும் பிரிவைச் சேர்ந்த பொது மேலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சீர்காழி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் பள்ளிக் கட்டடம் அருகே எண்ணெய்க் கிணறு அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் எண்ணெய்க் கிணறு அமைப்பது குறித்த ஆய்வறிக்கையை கிராமத்தினர் அனைவருக்கும் விரைவில் அனுப்பி வைப்பதாகக் கூறிச் சென்றனர்.  

இதுபற்றி கிராம மக்களிடம் பேசியபோது, "பள்ளிக் கட்டடத்திலிருந்து 20 அடி தூரத்தில் எண்ணெய்க் கிணறு அமைப்பது முறையா? இப்போதுதான் எல்லா அதிகாரிகளும் வந்து பார்த்தார்களே, இங்கு எண்ணெய்க் கிணறு அமைக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை தரவேண்டியதுதானே?. அதைவிட்டுவிட்டு அறிக்கை அனுப்பி வைப்போம் என்று கூறுவது ஏமாற்று வேலை. ஏற்கெனவே அருகில் உள்ள பழையபாளையத்தில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. எங்கள் எதிர்ப்பை மீறி இங்கே எண்ணெய் கிணறு அமைக்க முயன்றால் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்' என்றனர்.