வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:19:01 (17/05/2018)

`மணல் குவாரிக்கு நிரந்தரத் தடை வேண்டும்!’ - அன்னதானத்துடன் வழிபாடு நடத்திய பொதுமக்கள்

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்க நிரந்தரமாக தடைவிதிக்கக்கோரி மாரியம்மன் கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊற்றி பொதுமக்கள் அன்னதானம் வழங்கி நூதன முறையில் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். 

                            மணல் குவாரி

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் புதிய மணல் குவாரி துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமானுர் பொதுமக்கள் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரியை அரசு தொடங்கியது. அப்போது சம்பவ இடத்துக்கு வந்த பொக்லைன் இயந்திரத்தைப் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் கண்டனப் பேரணி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து 3 நாள்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். அப்போது கையெழுத்து பெற்ற படிவங்களை தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். 

                                   

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியப் பகுதியில் திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டியவாறு கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்து விட்டது. 

இந்நிலையில், தற்போது திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

                                  

மேலும், மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 9-ம் தேதி வழக்கை விசாரித்து திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் துவங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு ஜூன் 5-ம் தேதி வரை இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை உத்தரவு கிடைக்க வேண்டுமெனக் கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்புக் குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றி, அன்னதானம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த அம்மன்தான் ஆளுங்கட்சியினருக்கு நல்ல புத்திமதி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டிக்கொண்டனர்.