வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/05/2018)

கடைசி தொடர்பு:19:40 (17/05/2018)

விடிய விடிய நடந்த ரெய்டு!  - வளைக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர்

முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் நேற்று இரவு சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மலேசிய நஜிப் ரசாக்

மலேசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அண்மையில் நடந்தது. இதில், நஜீப் ரசாக் தலைமையிலான பி.என் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட மகாதீர் முகமதுவின் கூட்டணி வெற்றி பெற்றது. முன்னதாக, பிரதமராக நஜீப் ரசாக் பதவி வகித்த காலத்தில், மலேசிய அரசின் நிதியிலிருந்து 731 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்ததாகவும் அந்தத் தொகையை தனது வங்கிக் கணக்குகளில் மாற்றிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் 92 வயதான மகாதீர் முகமது, முன்னாள் பிரதமர் நஜீப் மீது சுமத்தப்பட்ட முறைகேடு வழக்குகளை விசாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் அரசு சார்பில் நிதி நிறுவனம் ஒன்றை நஜீப் நடத்திவந்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் நடந்தாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. சோதனை நடத்தப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் குடும்பத்தினரை நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.