வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (17/05/2018)

கடைசி தொடர்பு:20:20 (17/05/2018)

`கரும்பு விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசு!’ - போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்

இதில் தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகை பாக்கி ரூ.212 கோடி உள்ளதாகவும், எனவே, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழக அரசு தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு கரும்பு விவசாயத்தை அழிக்க முயல்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தனியார் சக்கரை ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தர வேண்டிய  ரூ.1,340 கோடி பாக்கித் தொகையை  தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். கரும்பு விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வருவாய் பங்கீட்டு முறையில் கரும்பு விலையை நிர்ணயம் செய்கின்ற முறையை கைவிட வேண்டும் எனவும், கூட்டுறவு சங்க ஆலைகள் வழங்கப்பட வேண்டிய 212 கோடி ரூபாயை உடனே வழங்கக் கோரியும், இந்த ஆண்டு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாய சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். விவசாயிகளின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.