வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:20:00 (17/05/2018)

தனபாலை கைது செய்ய இடைக்காலத் தடை: சிங்கப்பூர் தப்பிச் சென்றாரா?

பழநி முருகன் கோயிலில் சிலை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்துக்கு கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் தனபால் 

பழநி கோயில் சிலை விவகாரத்தில் ஸ்தபதி முத்தையா மற்றும்  இணை ஆணையர்  ராஜா ஆகியோர் ஏற்கெனவே  கைது செய்யப்பட்டுள்ளனர்.  அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து, தனபாலிடம் விசாரணை நடத்த இரண்டு முறை சம்மன் அனுப்பியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ்.  ஆனால், தனபால் ஆஜராகவில்லை. இதனால் அவரின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து, தனபாலைத் தேடினர். இந்நிலையில், தனபால் தலைமறைவாகியுள்ளதாகவும் போலீஸார் அறிவித்தனர். இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் தனபால். ``இந்த வழக்கில் 3-வது எதிரியாக நான் சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நேரடியாக என் மீது குற்றம்சாட்டப்படவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.

தனபாலின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதுதொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை தனபாலை கைது செய்ய தடைவிதித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் தனபால், சிலருடைய உதவியுடன்  சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தனபால் மன்னார்குடி சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.