வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/05/2018)

`பலரின் வயிறைக் குளிர வைத்த நான் வயிறு எரிந்து நிற்கிறேன்!’ - கலங்கும் கண்பார்வையற்ற இளநீர் வியாபாரி

 மதுரையில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளி நடத்தி வந்த இளநீர்க் கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில்

இளநீர்

மதுரையில் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி நடத்தி வந்த இளநீர்க் கடைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இளநீர் நாசமானது. அரசின் உதவி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தனது பார்வையை இழந்த நிலையிலும் இளநீர்கடை நடத்திவருகிறார் . புதுநத்தம் சாலையில் அரசு மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு முன்பாக சாலையோரத்தில் இவரது இளநீர் கடை உள்ளது. கண்கள் தெரியவில்லை என்றாலும் இளநீரை எளிமையாக வெட்டும் பழக்கம் உடையவர். யாருடைய உதவியும் இல்லாமல் இந்த இளநீர் கடையை நடத்தி வந்தார். இவருடைய திறமையைப் பாராட்டும் பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர், சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டுப் பயணிகள் என்று பலரிடமும் வாழ்த்து பெற்று பிரபலமானவர் ராஜா. இந்நிலையில், இவரது இளநீர் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 500-க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை இறக்கி வைத்துவிட்டு அதிகாலை 1:30 மணிக்கு வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த சமயம் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இளநீர் கடைக்கு தீவைத்துள்ளனர். இதில் கடையில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட இளநீர் காய்கள், தென்னங்கூரையால் அமைக்கப்பட்ட கடை ஆகியவை தீயில் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் ரூ.50 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காலையில் கடைக்கு வந்த ராஜா, எரிந்துகிடந்த சம்பவத்தைப் பார்த்து கண் கலங்கினார்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து ராஜாவை நேரில் சந்தித்து விசாரித்தோம். ``எனக்கு இளநீர் வியாபாரம் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாது, சமூக விரோதிகள் என் கடையில் தீ வைக்கவில்லை என் வயிற்றில் தீயை  வைத்துவிட்டனர். பலரின் வயிற்றை குளிரவைத்த நான் வயிறு எரிந்து நிற்கிறேன். இந்த இளநீர் கடைவருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறேன். எனவே, எனது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.