வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (17/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (17/05/2018)

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி! - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைகழக ஆன்லைன் கலந்தாய்வுக்கு அனுமதி

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு இந்த வருடம் முதல், ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன் கட்டணத்தையும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு, மே 10-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலமாகச் செலுத்தலாம் எனக் கூறினார். மேலும், கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்' என்றும் தெரிவித்தார். 

ஆனால், அன்று மாலையே நடந்த வழக்கு விசாரணையின்போது அண்ணா பல்கலைக்கழகம், தனது நிலைப்பாட்டை மாற்றியது. `டி.டி மற்றும் பே-ஆர்டர் மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால், அதை அனுமதிக்க முடியாது. அதற்குப் பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்’ என்று அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ''விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது. எளிதாக எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்பதை அடுத்த நாளான மே 11-ம் தேதி தெரிவிக்க வேண்டும்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மே 11-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், டி.டி மூலமே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.  

எந்த முறையில் பணம் செலுத்துவது என்பது உறுதியாகத் தெரியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தில்  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ``கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்துவதினால் கிராமப்புற மாணவர்கள் சென்னைக்கு வந்து கஷ்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மாணவர்கள் வசதிக்கேற்ப விண்ணப்பக் கட்டணத்தை டி.டி மூலமே செலுத்தலாம்’ என்று கூறி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், விண்ணப்பக் கட்டணத்தை டி.டியாகச் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான உதவி மையங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றைக் கண்காணிக்க மூத்த கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மூன்று அம்சங்களையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.