வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (17/05/2018)

கடைசி தொடர்பு:22:26 (17/05/2018)

`ஃபேஸ்புக்கில் கலக்கும் கேரள சுற்றுலாத் துறை!’ - தரவரிசைப் பட்டியலில் முதலிடம்

நாடு முழுவதுமுள்ள மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் சுற்றுலாத் துறைகளுக்கான பேஸ்ஃபுக் பக்கங்களுக்கான பட்டியலில் கேரள மாநில சுற்றுலாத் துறையின் ஃபேஸ்புக் பக்கம் முதலிடம் பிடித்துள்ளது.

ஃபேஸ்புக்

இந்தியாவில் சமூக வலைதளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள், தங்களின் செயல்பாடுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் புரோமோஷன் செய்வது, அப்டேட்களை வழங்குவது உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டு வருகின்றன. அதிலும், மாநில சுற்றுலாத் துறைகளின் செயல்பாடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றின விரிவான தகவல்கள், பேக்கேஜ் அப்டேட்கள் என பல்வேறு தகவல்களை வாரி வழங்குகின்றன. 

இந்தநிலையில், ஃபேஸ்புக்கில் கடந்த 2017-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநில சுற்றுலாத் துறைகளின் பக்கங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், கேரள மாநில சுற்றுலாத் துறையின் ஃபேஸ்புக் பக்கம், முதலிடம் பிடித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கேரள மாநில சுற்றுலாத் துறையின் பேஸ்புக் பக்கத்தில் 15 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. பொதுவாக, தேனிலவு என்றாலும் சரி குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லத் திட்டமிட்டாலும் சரி, சட்டென நமக்கு முதலில் நினைவில் வருவது கேரள மாநிலமே. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.  

கேரளாவுக்கு அடுத்தடுத்த இடங்களை ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில சுற்றுலாத் துறைகளின் ஃபேஸ்புக் பக்கங்கள் பெற்றுள்ளன. இந்தத் தரவரிசை பட்டியலானது, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கங்களில் கருத்துகளை பகிர்ந்தவர்கள், கருத்து தெரிவித்தவர்கள், லைக் செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. முதல் இடம் என்ற அங்கீகாரம் கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கான விருதையும் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விருதை, கேரள மாநில சுற்றுலாத் துறையின் இயக்குநர் பி. பாலா கிரண் பெற்றுக்கொண்டார்.