`மக்களின் உயிரைக் குடிக்கும் ஆலைகள் இயங்கக் கூடாது!’ - தூத்துக்குடியில் கமல் பேச்சு

``லாபம் சம்பாதிக்கிறோம் என்ற பெயரில் மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற வியாபாரம் தேவையில்லை. அப்படிப்பட்ட ஆலைகள் இயங்கக் கூடாது" என தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்

``மக்களுடன் பயணம்.. மாற்றத்தை நோக்கி.." என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணத்தைத் தொடங்கினார். இரண்டாவது நாளான இன்று (17.05.18) தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் தொடங்கி திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, புன்னக்காயல், ஏரல், பண்டாரவிளை ஆகிய ஊர்களில் பேசிவிட்டு இறுதியாக தூத்துக்குடி வந்தார் கமல். 

தூத்துக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ``நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மக்கள் நீதி மய்யம் நாட்டை ஆள வேண்டும்" என 6 வயது சிறுமி, தினியா வழங்கிய வரவேற்புரையை ஆச்சர்யத்துடன் கேட்டபடி பேசத் தொடங்கினார் கமல், ``3 வயதில் நான் நடிக்க ஆரம்பித்தேன். இந்த 60 ஆண்டுகளில் என் கடமையை செய்துகொண்டிருந்தேன். தற்போது நான் தொடங்கியுள்ள இந்த அரசியல் பாதை, எனக்கான ஆதாயத்துக்காக அல்ல. கொடுக்கல் வாங்கலுக்கான பாதை அல்ல மக்களின் மேம்பாட்டுக்கான பாதை. எனக்கு கிடைத்த நல்வாழ்வுக்கு நான் செய்யும் கடமை. எஞ்சி இருக்கும் என் வாழ்க்கையை அரசியலில் செலவிட வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். 

அரசியல் என்பது பணமும் பலமும் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கும் நேரம் வந்துவிட்டது. இந்தக் கட்சியின் லட்சியங்களில், நாடு வளமாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. பெரிய ஆலைகள் வர வேண்டும். சிறிய ஆலைகளும் தொடர வேண்டும். ஆனால், லாபம் சம்பாதிக்கிறோம் என்ற பெயரில் மக்களின உயிர் போனாலும் பரவாயில்லை என்ற வியாபாரம் தேவையில்லை. அப்படிப்பட்ட ஆலைகள் இயங்கக் கூடாது. நான் எந்த ஆலையைச் (ஸ்டெர்லைட்) சொல்கிறேன் என உங்களுக்கே தெரியும். இதற்காகவே நான் கிராமங்களுக்குச் சென்றுவிட்டு பிறகு தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன்.

மக்கள் குறைகளைச் சொல்ல சரியான  இடம்தான் மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி. மக்களின்  கையில் உள்ள ஆயுதமான கிராமசபைக் கூட்டத்தைப் பற்றி பரப்பியது அதன் மூலம்தான். அது சாதாரண செயலி மட்டுமல்ல. ஒரு வன்முறையில்லா ஆயுதம். ஊழல் அரசியல்வாதிகளே அதைப்பார்த்து பயப்படுகிறார்கள். ஊழலைப் பார்த்து கோபம் அடைந்து நான் தொடங்கிய அரசியல் கட்சி, மற்ற அரசியல் கட்சிகளைவிட, முற்றிலும் மாறுபட்ட அரசியலை முன்னெடுக்கும். நேர்மையான அரசியலை நோக்கி நாங்கள் செல்கிறோம்" என்றார். நாளை காலை நெல்லை மாவட்டத்தில் தொடங்கி மாலையில் விருதுநகரில் தன் பயணத்தை கமல் நிறைவு செய்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!