வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (17/05/2018)

கடைசி தொடர்பு:23:30 (17/05/2018)

பெயின்ட் தொழிலாளிகள் மரணம் ! - 2 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து 2 கட்டடத் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

உயிரிழந்த தொழிலாளிகள்

திருப்பூர் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் சமீபத்தில் வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடுவதற்காக புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான அந்த கட்டடத்தின் திறப்பு விழா அடுத்த வாரம் நடைபெறவிருந்த சூழலில், கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பூர் வலையங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் வண்ணம் பூசும் வேலைகளைக் கவனித்து வந்தார். நேற்றைய தினம் காலை ராஜாமணியும், அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கட்டடத்தின் சுவர் பகுதிகளை அளவீடு செய்துகொண்டிருந்தபோது, அவர்கள் கையில் வைத்திருந்த இன்ச் டேப் அங்கிருந்த மின்சார கம்பியில் பட்டு ராஜாமணியின் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியும் மின்சாரத்தில் சிக்கினார். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூரில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தில் தற்போது காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மரணமடைந்த பெயின்டர் ராஜாமணியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கட்டடத்தின் உரிமையாளர் பழனிசாமி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ரூபன் ஆகியோர் மீது தொழிலாளிகளை உரிய உபகரணங்கள் இல்லாமல் வேலையில் பணியமர்த்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது திருப்பூர் காவல்துறை.