டிவிலியர்ஸ், மொயின் அலி அதிரடி! - 218 ரன்கள் குவித்த பெங்களூர் அணி #RCBvsSRH

ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. 

டிவிலியர்ஸ்

Photo Credit: Twitter/IPL

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூர் அணியின் இன்னிங்ஸை கேப்டன் விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோர் தொடங்கினர். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பார்த்திவ் படேல் ஒரு ரன்னிலும், விராட் கோலி 12 பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் ஆட்டமிழந்து வெளியேறினர். ஐந்தாவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்ற நிலையில், கைகோத்த டிவிலியர்ஸ் - மொயின் அலி ஜோடி, பெங்களூர் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சைக் கொண்ட அணி என்று புகழப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை இந்த ஜோடி பதம் பார்த்தது. 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்த நிலையில், 69 ரன்களுடன் டிவிலியர்ஸ் ஆட்டமிழந்தார். ரஷீத் கான் வீசிய அதே ஓவரில் மொயின் அலியும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 65 ரன்கள் சேர்த்தார். அடுத்துவந்த கிராண்ட் ஹோம் அவர் பங்குக்கு 17 பந்துகளில் 40 ரன்கள் சேர்க்க, பெங்களூர் அணி 200 ரன்களைக் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சர்ப்ராஸ் கான் 8 பந்துகளில் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்த அணியின் பேசில் தம்பி, 4 ஓவர்கள் பந்துவீசி 70 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!